2014-ம் ஆண்டுக்கு முன் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் தஞ்சமடைந்த சிறுபான்மையின மக்களுக்குக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்த சட்டம் 2019 கொண்டு வரப்பட்டது.


இதன் மூலம் அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் வந்து நீண்ட காலமாக வசித்து வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை இந்த சட்டத்தின் மூலம் வழங்கப்பட உள்ளது. இது சிறுபான்மையினரைப் பாதிப்பதாக உள்ளது எனக் கூறி, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் இதனை அமல்படுத்த மாட்டோம் என்றும் கூறி வருகின்றன.


2019-ம் ஆண்டு இந்த சட்டம் கொண்டு வரப்பட்டிருந்தாலும், இதுநாள் வரை அமல்படுத்தப்படாமல் உள்ளது. இந்நிலையில், தேர்தலுக்கு முன்பாக இந்த சட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.


மேலும், இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாகக் கூறி, சர்ச்சைகள் எழுப்பப்பட்டு வருகிறது. இந்த சட்டம் குடியுரிமை வழங்க கொண்டு வரப்பட்டதே தவிர, யாருடைய குடியுரிமையும் பறிக்கப்பட அல்ல என்றும், குடியுரிமை பறிப்பு தொடர்பாக எந்த ஷரத்தும் இந்த சட்டத்தில் இல்லை எனக் கூறியுள்ளார். சிஏஏ விவகாரத்தில் காங்கிரஸ் தான் கொடுத்த வாக்குறுதியில் இருந்து பின் வாங்கிவிட்டதாகவும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.