வளரும் இந்தியா அதன் டிஜிட்டல் சாதனைகளால் பெரிதும் அடையாளம் காணப்படுகிறது. ஆனால் நிஜ உலகில் அரங்கேறும் மோசடிகள், ஏமாற்று வித்தைகளுக்கு நிகராக ஆன்லைனிலும் மோசடிகள் அதிகரித்தே காணப்படுகின்றன.
உத்தரபிரதேசம் மாநிலம் ரேபரேலியை சேர்ந்த இளம் விவசாயி சுனில் குமார். இவரது வருமானம் பெரிதும் பண்ணை மாடுகளை நம்பியே உழன்று வருகிறது. ரகம்ரகமான மாடுகளை தனது பண்ணையில் வளர்க்கும் சுனில் குமார் அவற்றுக்கான தீவனங்கள் இதர பொருட்களை ஆன்லைன் வாயிலாகவே பெற்று வருகிறார்.
ஆனலைன் வாயிலான அனுகூலங்கள் அவருக்கு பெரிதும் உதவி வந்தன. ஆன்லைன் உதவியால் சுனில் குமாரின் நேரமும், உழைப்பும் வெகுவாய் மிச்சமானது. ஆன்லைனில் பொருட்களை வாங்குவது மட்டுமன்றி, கால்நடை பராமரிப்பு சார்ந்த அனைத்து உதவிகளும் அவருக்கு ஆன்லைன் வாயிலாகவே கிடைத்தன.
குறிப்பாக யூடியூபில் காணக்கிடைக்கும் வீடியோக்கள் மூலமாக தனது பண்ணைத் தொழிலில் திருப்திகரமான வருமானத்தை சுனில் குமார் ஈட்டி வந்தார். ஆனால் அதே யூடியூப் வாயிலாக அவருக்கான ஏமாற்றுப் பொறியும் காத்திருந்தது.
யூடியூப் சேனல் ஒன்றில் ’எருமை மாடு’ விற்பனைக்கு என்ற அறிவிப்பை பார்த்து சுனில் குமார் ஆர்வமானார். வீடியோவில் இடம்பெற்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விசாரித்தார். மறுமுனையில் பேசியவர் ஜெய்ப்பூரை சேர்ந்த பால் பண்ணை தொழிலதிபர் சுபம் என்று அறிமுகமானார்.
தினம் 18 லிட்டர் பால் கறக்கும் உறுதிமொழியுடனான எருமை ஒன்றினை வாங்க சுனில் குமார் முன்வந்தார். ரூ55 ஆயிரத்துக்கு பேரம் பேசி, முதல் தவணையாக ரூ10 ஆயிரம், அடுத்த தவணையாக ரூ25 ஆயிரம் என ஆன்லைனில் சுனில் பணத்தை அனுப்பி வைத்தார். அதன் பிறகு சுனில் குமாரின் தொடர்பு எண்ணை சுபம் பிளாக் செய்துவிட்டார். பதறிப்போன சுனில் குமார் தற்போது காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு சட்ட நடவடிக்கைக்காக பரிதாபமாக காத்திருக்கிறார்.

0 Comments