மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப்  மாநிலங்களைப் போலவே உத்தரப் பிரதேசத்திலும் இந்தியா கூட்டணியில் இருக்கும்  காங்கிரஸுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.  அங்குள்ள மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு இடையே  கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. 


மக்களவைத் தேர்தலையொட்டி உத்தரப் பிரதேசத்தில் 80 தொகுதிகளில்  முதல்கட்டமாக 16 தொகுதிகளுக்கு  வேட்பாளர்களை அறிவித்துள்ள  சமாஜ்வாதி கட்சி,  11 தொகுதிகளை காங்கிரஸுக்கு வழங்கியிருந்தது. இந்த நிலையில் அது தன்னிச்சையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் மாநில பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே, ''கூட்டணி தர்மத்தை சமாஜ்வாதி பின்பற்றவில்லை. கூட்டணியில் ஒருதலைப்பட்சமான அறிவிப்பை சமாஜ்வாதி வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி கோரிய தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது. காங்கிரஸுக்கு அறிவிக்காமல் சமாஜ்வாதி செய்யும் இத்தகைய செயல் ஆபத்தானது'' எனக் குறிப்பிட்டிருந்தார்.


இதற்கு உடனடியாக  அகிலேஷ்யாதவ் பதில் அளித்துள்ளார். ''உத்தரப் பிரதேசத்தில் கூட்டணி வைத்து மக்களவைத் தேர்தலைச் சந்திக்கிறோம். அதனால், அனைத்துக் கட்சிகளுக்கும்  தொகுதிகளை முறையாக ஒதுக்க வேண்டும். கூட்டணி தர்மத்தை சமாஜ்வாதி கட்சி முறையாக பின்பற்றி வருகிறது. நாங்கள் இந்த  மாநிலத்திலிருந்து பாரதிய ஜனதா கட்சியை வெளியேற்ற முயற்சிக்கிறோம்.


எங்களால் தேர்வு செய்யப்படும் வேட்பாளர்கள் பாஜகவை விரட்டுவார்கள் என சமாஜ்வாதி கட்சி நம்புகிறது. குறிப்பிட்ட வேட்பாளருக்காக எந்தவொரு சமரசமும் செய்யவில்லை. பாஜகவைத் தோற்கடிப்பதற்கான அனைத்து வகையான முயற்சிகளையும் எடுக்கிறோம்'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்த கருத்து மோதல் பெரிதாகி அங்கு இரண்டு கட்சிகளும் தனித்துப் போட்டியிட வேண்டிய நிலை உருவாகலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.