கன்னியாகுமரி: பிறந்து 42 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை டிஸ்யூ பேப்பரை வைத்து கொன்ற கொடூர தாய்



 குமரி மாவட்டம் கருங்கல் அருகே பாலூர் பகுதியில், 42 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை தாயே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய் பெனிட்டா ஜெய அண்ணா, தனது குழந்தையின் மூச்சுக் குழாயில் டிஸ்யூ பேப்பரை திணித்து மூச்சை அடைத்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. குழந்தையின் மரணம் குறித்து ஆரம்பத்தில் குழப்பம் நிலவிய நிலையில், பிரேத பரிசோதனையில் வெளிவந்த தகவல்கள் சம்பவத்தை கொலை என உறுதி செய்துள்ளன.

பெனிட்டா ஜெய அண்ணா, பள்ளிப் படிப்பு முடித்தபின் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தோழி ஒருவரின் ஏற்பாட்டில் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். பின்னர் திண்டுக்கல் மாவட்டத்திற்கே இடமாற்றம் செய்யப்பட்டு அங்கு பணிபுரிந்தபோது, தோழியின் கணவரின் நண்பரான கார்த்திக்குடன் காதல் ஏற்பட்டது. அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பின், கர்ப்பம் தரித்து 42 நாட்களுக்கு முன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததைத் தொடர்ந்து, பெனிட்டா தனது கணவருடன் தாயார் வீடு இருக்கும் கருங்கல் பகுதியில் தங்கி வந்தார்.

சம்பவம் நடந்த தினம், கார்த்திக் தன் தாயாரை பார்ப்பதற்காக திண்டுக்கல் சென்றிருந்தார். இரண்டு நாட்கள் கழித்து திரும்பி வந்து, குழந்தையை எடுத்து கொஞ்சும்போது, குழந்தையின் நெற்றி காயமடைந்து, அசைவின்றி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

குழந்தை பால் குடிக்கும் போது கீழே விழுந்து காயம் ஏற்பட்டதாகவும், பால் குடிக்கும் போது மூச்சு திணறி இருக்கலாம் என்றும் பெனிட்டா கூறினார். உடனடியாக கார்த்திக் குழந்தையை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

முதலில் இது இயல்பான மரணம் அல்லது விபத்து என கருதப்பட்ட நிலையில், கருங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து உடலை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். அங்கு குழந்தையின் நாசியில் டிஸ்யூ பேப்பர் சிக்கியிருந்தது தெரியவந்தது.

இதன் அடிப்படையில், குழந்தை தாயால் திட்டமிட்டே கொலை செய்யப்பட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து, போலீசார் பெனிட்டாவை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், “பெண் குழந்தை பிறந்ததால், மாமியார் தன்னை ‘ராசி இல்லாதவள்’ என்று திட்டுவந்தார். மேலும், குழந்தை பிறந்த பின் கணவர் தன்னிடம் அன்பு காட்டவில்லை; முழு அன்பையும் குழந்தை மீதே செலுத்தினார். இதனால் மனமுடைந்து, குழந்தை தான் தனது வாழ்க்கைக்கு இடஞ்சலாக உள்ளது என நினைத்து கொலை செய்தேன்” என்று பெனிட்டா ஒப்புக்கொண்டார்.

முதலில் குழந்தையின் தலையை சுவரில் அடித்து கொல்ல முயன்றும் முடியாமல் போனதால், இறுதியில் டிஸ்யூ பேப்பரை மூச்சுக் குழாயில் திணித்து கொன்றதாகவும் அவர் தெரிவித்தார். தற்போது பெனிட்டா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் முழு மாவட்டத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Post a Comment

0 Comments