ஓடும் பேருந்தில் பாலியல் தொல்லை..... போலீஸ்காரரை செருப்பால் அடித்து வெளுத்த கல்லூரி மாணவி

 


நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி, கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரியில் தற்போது செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருவதால், கல்லூரி மாணவி தேர்வு எழுதுவதற்காக கூடலூரில் இருந்து பாலக்காடு செல்லும் அரசு பஸ்சில் கோவைக்கு செல்ல ஏறினார். பஸ்சில் 3 பேர் அமரக்கூடிய இருக்கையில் மாணவி அமர்ந்திருந்தார். அப்போது கோவையில் போலீஸ்காரராக பணியாற்றும் ஒருவர் அதே பஸ்சில் ஏறினார்.

அவர் கல்லூரி மாணவி அமர்ந்திருந்த இருக்கையின் அருகில் அமர்ந்தார். அதன் பின்னர் மேலும் ஒருவர் அதே இருக்கையில் அமர்ந்ததால், போலீஸ்காரர் கல்லூரி மாணவியை ஒட்டி அமர்ந்து கொண்டார். இதையடுத்து கூடலூரில் இருந்து பஸ் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அப்போது போலீஸ்காரர் தூங்கி அந்த மாணவி மீது சாய்ந்துள்ளார். தூக்கத்தில் தெரியாமல் மேலே சாய்ந்திருக்கலாம் என்று கருதி மாணவி அமைதியாக இருந்தார்.ஒரு கட்டத்தில் போலீஸ்காரர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, என்ன செய்வது என்று தெரியாமல் அமைதியாக இருந்துள்ளார். ஆனால், போலீஸ்காரரின் தொல்லை எல்லை மீறியதால், பஸ் ஊட்டி பஸ் நிலையம் வந்ததும் ஆவேசமடைந்த கல்லூரி மாணவி தனது செருப்பை கழற்றி போலீஸ்காரருக்கு அடி கொடுத்து வெளுத்து வாங்கினார். அங்கு பொது மக்கள் கூட்டம் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தகவல் அறிந்த ஊட்டி மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அந்த போலீஸ்காரரை விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.இதற்கிடையே மாணவியின் பெற்றோர் போலீசாரை தொடர்பு கொண்டு வழக்குப்பதிவு செய்தால் கல்லூரி மாணவி படிப்பு பாதிக்கப்படலாம் என்றும், சட்ட சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் நினைத்து வழக்குப்பதிவு செய்ய வேண்டாம் என கூறி ஒதுங்கி விட்டனர். கல்லூரி மாணவிக்கு பஸ்சில் போலீஸ்காரர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Post a Comment

0 Comments