தமிழக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 20 அன்று வெளியானது. இதில் திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பகுதியில், வறுமையான சூழ்நிலையிலும் கல்வி கற்று, பெற்றோருக்கு உதவியாக நெசவு மற்றும் விவசாய வேலைகளுக்கு இடையே அரசுப் பள்ளி மாணவ-மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணியில் எம்.கே.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் இந்தாண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களில் 72 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில், இப்பள்ளியில் பயின்ற மாணவர் D.R.நித்தின் 488 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்தார். இவர் நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். பள்ளி விடுமுறை நாட்களில் தனது பெற்றோருடன் சேர்ந்து நெசவுத் தொழில் செய்துகொண்டே படித்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே பள்ளியில் மாணவர் S.பகவத் 458 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும், மாணவர் T.மோனிஷ் 455 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தையும்பபடைத்துள்ளனர்
இதேபோன்று, ஆரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி இந்தாண்டு 96 சதவீதம் மிகச்சிறந்த தேர்ச்சியைப் பெற்றுள்ளது. இப்பள்ளியில் பயின்ற மாணவி கி.நர்மதா 480 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார்.
விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், வறுமையான சூழ்நிலையிலும் மனம் தளராமல், சிறு வயது முதலே பெற்றோருக்கு உதவியாக வயல் வேலைக்குச் சென்று கொண்டே படித்து இந்த உன்னத மதிப்பெண்ணைக் குவித்துள்ளார்.
மேலும், இப்பள்ளியில் மாணவிகள் மூ.கீர்த்திகா,மு.ஸ்ரீ லட்சுமி ஆகிய இருவரும் தலா 478 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், மாணவி மெ.கிருத்திகா 474 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். மேலும் 15 க்கும் மேற்பட்ட மாணவிகள் 450 க்கு மேல் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைவருகின்றனர்.
குடும்ப வறுமையிலும், பெற்றோரின் தொழிலுக்குத் தோள் கொடுத்துக்கொண்டே கல்வியில் சாதனை படைத்த அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளை அந்தந்தப் பகுதி மக்கள், கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நேரில் சந்தித்து, பொன்னாடை போர்த்தி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்
வறுமையாலும் உழைப்பாலும் சோர்ந்து போகாமல் கல்வியில் சிகரம் தொட்ட திருவள்ளூர் மாவட்டம் ஆரணி அரசு பள்ளி மாணவ, மாணவிகளின். இச்சாதனை ஒட்டுமொத்த பகுதிக்கும் பெருமை சேர்க்கும் விஷயமாகும்.

0 Comments