ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, சாலை வசதி கோரியும், நிதி முறைகேடு புகார் குறித்தும் கீழ அரும்பூர், முகில்தகம் -ஏசுபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.குளத்தூர் விளக்கு முதல் கீழ அரும்பூர் வழியாகச் செல்லும் திருவொற்றியூர் இணைப்புச் சாலை மற்றும் முகில்தகம் ஏசுபுரம் முதல் நம்புதாளை வரை உள்ள சாலைகள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் செப்பனிடப்படாமல் மோசமான நிலையில் உள்ளன.
இந்த இடைப்பட்ட காலத்தில், தார்ச் சாலைகள் எதுவும் அமைக்கப்படாத நிலையிலும், சாலை அமைக்கப்பட்டதாகக் கூறி போலி கணக்கு காட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் பில் எடுத்து முறைகேடு செய்துள்ளதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.சாலைகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதால், தங்களின் வாழ்வாதாரமும் போக்குவரத்து வசதியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகப் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
"எங்கள் பகுதிக்குச் சாலை அமைக்காமலேயே நிதி எடுக்கப்பட்டுள்ளது குறித்து முறையான விசாரணை நடத்தி, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாகச் சாலைகளைச் சீரமைக்க வேண்டும். தவறும்பட்சத்தில் எங்கள் போராட்டம் மேலும் தீவிரமடையும்."
இப்போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு நிர்வாகி சந்தானம் தலைமையில் நடைபெற்றது. கீழ அரும்பூர் நாச்சியார், முகில்தகம் ஏசுபுரம் ஆரோக்கியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயளாலர் குருவேல், தாலுகா செயலாளர் ஜெயகாந்தன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் முத்துராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். இப்போராட்டத்தால் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

0 Comments