ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பிடாரி கோவில் பகுதிகளில், பொதுமக்களுக்கும் சுற்றுப்புறச் சூழலுக்கும் சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தும் வகையில் கண்மாய் பகுதிகளில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இது குறித்து அண்மையில் செய்திகள் வெளியான நிலையில், தற்போது அங்கு கொட்டப்படும் குப்பைகளை அகற்றாமல், அப்படியே தீ வைத்து கொளுத்தி விடுகின்றனர்.
இதனால் அந்தப் பகுதி முழுவதும் கடும் புகை மூட்டம் ஏற்பட்டு, காற்று மாசடைந்து வருகிறது. குறிப்பாக, அவ்வழியாகச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் புகை மூட்டத்தால் கண் எரிச்சல் மற்றும் சுவாசப் பாதிப்புகளுக்கு உள்ளாகி, பெரும் சிரமத்துடன் சாலையைக் கடந்து செல்கின்றனர்.
அருகில் உள்ள குடியிருப்பு பகுதி வரை புகை சூழ்ந்து நிற்பதால், மக்கள் நடமாடவே முடியாத அளவிற்குச் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி, குப்பைகளைக் கண்மாய் பகுதியில் கொட்டுவதைத் தடுப்பதோடு, அதற்குத் தீ வைக்கும் நபர்கள் மற்றும் அலட்சியமாகச் செயல்படும் அதிகாரிகள் மீது சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



0 Comments