ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கீழ்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவருடைய மகன் ரமேஷ், குடும்ப வறுமை காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூருக்குக் கூலி வேலைக்காகச் சென்றார். அங்கு கடினமாக உழைத்துக் கொண்டே, தனக்குக் கிடைத்த ஓய்வு நேரங்களில் உள்ளூர் மைதானங்களில் கிரிக்கெட் விளையாடி வந்துள்ளார். இவருடைய அபாரமான ஆட்டத் திறனைக் கவனித்த சிங்கப்பூர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்கள், அவரைத் தங்களது நாட்டு அணியில் சேர்த்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து பல்வேறு சர்வதேச நாடுகளுக்குச் சென்று சிங்கப்பூர் கிரிக்கெட் அணியின் சார்பாக விளையாடி ரமேஷ் சாதனை படைத்தார்.



இந்நிலையில், நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) டி20 தொடருக்கான வீரர்கள் ஏலம் மற்றும் தேர்வு சமீபத்தில் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட கிரிக்கெட் அணியின் சார்பாக விளையாட ரமேஷ் அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டிஎன்பிஎல் தொடரில் விளையாடுவதற்கான பயிற்சிகளில் பங்கேற்பதற்காக அவர் சிங்கப்பூரிலிருந்து தனது சொந்த ஊரான திருவாடானைக்கு வருகை தந்தார். அப்போது, வறுமைய வென்று தமிழக கிரிக்கெட் அணியில் தடம் பதித்துள்ள ரமேஷுக்கு, கீழ்குடி பகுதி பொதுமக்களும் இளைஞர்களும் மாலை அணிவித்து, சால்வை போர்த்தி, பட்டாசுகள் வெடித்து மிக உற்சாகமான வரவேற்பு அளித்தனர். குடும்பச் சூழ்நிலை காரணமாக வெளிநாடு சென்றாலும், தனது விடாமுயற்சியாலும் ஓய்வு நேர முறையான பயன்பாட்டினாலும் இன்று தமிழக அளவில் உயர்ந்துள்ள இந்த இளைஞரின் சாதனை ஒட்டுமொத்த ராமநாதபுரம் மாவட்ட மக்களையும் பெரும் வியப்பிலும் பெருமிதத்திலும் ஆழ்த்தியுள்ளது.