வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோரை அமெரிக்க ராணுவத்தினர் அதிரடியாகக் கைது செய்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தியுள்ளனர். இந்தச் சூழலில், வெனிசுலாவின் தற்காலிக அதிபர் என டொனால்ட் டிரம்ப் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வது போன்ற ஒரு பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ ஒரு ‘போதைப்பொருள் பயங்கரவாதி’ என்றும், அவர் மூலமாக அமெரிக்காவிற்குள் அபாயகரமான போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார்.
இந்த நிலையில், இம்மாத தொடக்கத்தில் வெனிசுலாவில் நுழைந்த அமெரிக்க ராணுவத்தினர், மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸை கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரும் உடனடியாக அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டனர். தற்போது நியூயார்க் நீதிமன்றத்தில் அவர்கள் மீது முறைப்படி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது குறித்து அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பமீலா போண்டி கூறுகையில், “அவர்கள் விரைவில் அமெரிக்க மண்ணில், அமெரிக்க நீதிமன்றங்கள் மூலம் தகுந்த நீதியை எதிர்கொள்வார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.வெனிசுலாவின் எண்ணெய் வளங்கள் மீது டிரம்ப் நீண்ட நாட்களாகக் கண் வைத்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவர் தனது ‘ட்ரூத் சோசியல்’ தளத்தில் விக்கிப்பீடியா பக்கத்தைப் போன்ற ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
அதில் அமெரிக்காவின் 45 மற்றும் 47-வது ஜனாதிபதி டிரம்ப் என்றும், ஜே.டி. வான்ஸ் துணை ஜனாதிபதி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அதே பக்கத்தில் டிரம்ப் ‘வெனிசுலாவின் தற்காலிக (Acting) ஜனாதிபதி’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளார். இந்தப் பதிவு உலக நாடுகளிடையே பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
வெனிசுலாவில் மதுரோ கைதுக்குப் பிறகு நிலவும் அசாதாரண சூழலைத் தொடர்ந்து, அங்குள்ள அமெரிக்கத் தூதரகம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: வெனிசுலாவில் பாதுகாப்பு நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. ஆயுதம் ஏந்திய கிளர்ச்சிக் குழுக்கள் சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி அமெரிக்கர்களைத் தேடி வருகின்றனர்.
சர்வதேச விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதால், அங்குள்ள அமெரிக்கர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும். மதுரோவின் கைதுக்குப் பிறகு, இம்மாத தொடக்கத்தில் வெனிசுலாவின் தற்காலிக அதிபராக டெல்சி எலோய்னா ரோட்ரிக்ஸ் முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். இருப்பினும், டிரம்பின் இந்தப் புதிய சமூக வலைதளப் பதிவு, வெனிசுலாவின் அரசியல் எதிர்காலத்தில் அமெரிக்கா நேரடித் தலையீடு செய்யப் போகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

0 Comments