திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் தேரோட்டம் கோலாகலம் - MAKKAL NERAM

Breaking

Wednesday, September 13, 2023

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் தேரோட்டம் கோலாகலம்

 


முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.இந்த விழாவின் 8-ம் நாளான நேற்று முன்தினம் மதியம் 12.05 மணியளவில் சுவாமி சண்முகர்- வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை நிற பட்டாடை அணிந்து, பச்சை நிற மலர்கள் சூடி பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளினார். பின்னர் 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், 10-ம் நாளான இன்று (புதன்கிழமை) காலை 6 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது. முதலில் விநாயகர் எழுந்தருளிய தேரும், பின்னர் சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் எழுந்தருளிய தேரும் 4 ரத வீதிகளில் பவனி வந்தது. தொடர்ந்து வள்ளி அம்பாள் எழுந்தருளிய தேரானது ரத வீதிகளில் பவனி வந்து நிலையத்தை வந்தடைந்தது.

தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம்பிடித்து தேரை இழுத்தனர். பக்தர்கள் வசதிக்காக பல்வேறு வழித்தடங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. தேரோட்டத்தையொட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment