• Breaking News

    அமைச்சர் பொன்முடியிடம் 5 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை

     


    சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமைச்சர் பொன்முடியிடம் 5 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.


    திமுக ஆட்சிக்காலத்தில் கனிமவளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, அவரது மகன் கௌதம சிகாமணி உடன் இணைந்து குவாரிகளில் முறைகேட்டில் ஈடுபட்டு அரசுக்கு 28 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படுத்தியதாக பொன்முடி, அவரது மகன் கௌதம் சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட ஏழு பேர் மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2012ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர்.


    இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து கடந்த ஜூலை 17ம் தேதி அமைச்சர் பொன்முடி, அவரது மகன் எம்.பி கௌதம் சிகாமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டு கணக்கில் வராத 81 லட்ச ரூபாய் பணம், 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்ததுடன் வங்கிக்கணக்கில் வைத்திருந்த 41 கோடி ரூபாயை முடக்கி அமலாக்கத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.



    பின்னர் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கௌதம் சிகாமணி ஆகியோரை இருமுறை சாஸ்திரி பவன் அலுவலகத்திற்கு வரவழைத்து சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக விசாரணை நடத்தினர். இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக மீண்டும் இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் பொன்முடிக்கு சம்மன் அளித்தனர். சம்மன் அடிப்படையில் மூன்றாவது முறையாக இன்று காலை 10:40 மணியளவில் அமைச்சர் பொன்முடி அவரது வழக்கறிஞர்களுடன் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.


    சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக பொன்முடியிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள் அவரது வாக்குமூலத்தை வீடியோவில் பதிவு செய்ததாக தெரிகிறது. விசாரணை முடிந்து அமைச்சர் பொன்முடி மாலை 4.15 மணியளவில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு சென்றார்.‌ விசாரணை முடிந்து வெளியே வந்த பொன்முடியை அங்கிருந்த ஊடகத்தினர் வீடியோ எடுத்த போது அவர்களை வீடியோ எடுக்கக்கூடாது என செய்கையில் கூறிவிட்டு வேகமாக புறப்பட்டு சென்றார்.

    No comments