தந்தையிடம் பணம் பறிக்க கடத்தல் நாடகம்..... சிக்கிய குள்ளநரி மகன்....
தனது தந்தையிடமிருந்து 30,000 ரூபாயைப் பறிக்க கடத்தல் நாடகமாடிய இளைஞர் மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் மாவட்டத்தில் உள்ள ஃபாதர்வாடி பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் டிச.7-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர், அதன் பின் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து அவரது தந்தை டிச.8-ம் தேதி வலிவ் காவல் நிலைய்ததில் புகார் செய்தார். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அந்த இளைஞரைத் தேடி வந்தனர்.
இந்த நிலையில், இளைஞரின் தந்தைக்கு போன் வந்துள்ளது. அதில் பேசிய அவரது மகன், தன்னை 3 பேர் கடத்தி வைத்துள்ளதாகவும், 30,000 ரூபாய் தந்தால் தான் என்னை விடுவிப்பதாக மிரட்டுகின்றனர் என்றும், இல்லாவிட்டால் கொலை செய்து விடுவேன் என மிரட்டுவதாக தந்தையிடம் கதறி அழுதுள்ளார். அத்துடன் பணத்தை அனுப்புவதற்காக க்யூஆர் கோட்டையும் அவர்கள் தந்ததாக, அதையும் தந்தைக்கு அனுப்பியுள்ளார்.
இந்த விஷயத்தை காவல் துறையினரிடம், இளைஞனின் தந்தை கூறினார். இதையடுத்து அந்த க்யூஆர் கோட்டை வைத்து தனிப்படை போலீஸார் மும்பையில் வசாய், விரார், நல்லசோபரா பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தினர். இந்நிலையில், நேற்று இரவு வசாய் பட்டாவிலிருந்து இளைஞரை போலீஸார் மீட்டனர். அப்போது அவரிடம் விசாரணை நடத்திய போலீஸார், அதிர்ச்சியடைந்தனர்.
தனது தந்தை பணம் தர மறுத்ததால், அவரிடம் கடத்தல் நாடகம் நடத்தி 30,000 ரூபாயை பறிக்க மகன் திட்டமிட்டது தெரிய வந்தது. இந்த போலி கடத்தல் விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என போலீஸார், அந்த இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தந்தையிடம் பணம் பறிக்க மகனே கடத்தல் நாடகமாடிய விவகாரம், மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments