• Breaking News

    நாகலூர் அரசுப் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழா மற்றும் புகையில்லா போகி நிகழ்வு


    நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் வட்டம், நாகலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பொங்கல் விழாவும், தேசிய பசுமை படை சார்பில் புகையில்லா போகி விழிப்புணர்வு நிகழ்வும் பள்ளியின் தலைமை ஆசிரியர் பரமேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. பொங்கல் பண்டிகை நிகழ்வில் மாணவர்கள் புத்தாடையுடன் அனைவரும் பள்ளிக்கு வருகை தந்திருந்தனர். காலை முதலே ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட மியூசிக்கல் சேர், பலூன் உடைத்தல்  போட்டிகளில் மாணவர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் கலந்து கொண்டனர். 

    மதியம் பொங்கல் பானையில் பொங்கலிடப்பட்டு கதிரவனுக்கு படைக்கப்பட்டது. மதிய உணவாக அனைத்து மாணவர்களுக்கும் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது. பிறகு பள்ளியின் தேசிய பசுமை படை சார்பில் புகையில்லா போகி விழிப்புணர்வு நிகழ்வை தேசிய பசுமைப் படை ஆசிரியர் சீனிவாசன் ஏற்பாடு செய்திருந்தார். புகையில்லா போகி குறித்த உறுதி மொழியும், விழிப்புணர்வு துண்டு பிரசுரமும் மாணவர்களுக்கு வழங்கி, சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத போகிப் பண்டிகை கொண்டாட வலியுறுத்தப்பட்டது. 

    நிகழ்வின் இறுதியில் அனைத்து மாணவர்களுக்கும் கரும்புத் துண்டு வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளியின் ஆசிரியர்கள் அருள் செல்வம், லோகநாதன், சீனிவாசன், அருள்ஜோதி, செல்வரத்தினம், சங்கரவடிவேல் உள்ளிட்ட ஆசிரியர்களும், சத்துணவு ஊழியர்களும் கலந்து கொண்டனர். 


    நாகை மாவட்ட நிருபர் க.சக்கரவர்த்தி

    No comments