• Breaking News

    கடனால் மலர்ந்த காதல்..... காதலனை கரம் பிடித்த பட்டதாரி பெண்

     

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகா பெருமகளூரை சேர்ந்தவர் அனுஷ்வர்யா (வயது 24) எம்.ஏ.,பிஎட் பட்டதாரி. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த தாழையூத்து பட்டியை சேர்ந்தவர் மகேஷ்குமார் (33). இவர், பேராவூரணி பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.

    அந்த நிதி நிறுவனத்துக்கு கடன் கேட்டு அனுஷ்வர்யா சென்றார். அப்போது அனுஷ்வர்யாவுக்கு, மகேஷ்குமாரை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இந்த சந்திப்பு, நாளடைவில் காதலாக மலர்ந்தது. கடந்த 2 ஆண்டுகளாக இவர்கள் காதலித்து வந்தனர்.

    இதற்கிடையே மகேஷ்குமார்-அனுஷ்வர்யா காதல் விவகாரம் இருதரப்பு பெற்றோருக்கும் தெரியவந்தது. இதற்கு பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து காதல் ஜோடி இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி முறுநெல்லிக்கோட்டை ஊராட்சி சுள்ளெறும்பில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் அவர்கள் பாதுகாப்பு கேட்டு வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் நேற்று தஞ்சம் அடைந்தனர். இதனையடுத்து இருதரப்பு பெற்றோரையும் வரவழைத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    பேச்சுவார்த்தையில் மகேஷ்குமாரின் பெற்றோர் திருமணத்தை ஏற்றுக்கொண்டு 2 பேரையும் தங்கள் வீட்டிற்கு அழைத்துச்சென்றனர். பெண்ணின் பெற்றோர் மணமக்களுக்கு எந்தவித இடையூறும் செய்ய மாட்டோம் என்று எழுதிக்கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    No comments