திருக்குவளையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை தனியாருக்கு தாரைவாக்கும் மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியால் துவங்கப்பட்ட அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை தனியாரிடம் தாரை வார்க்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணநாதி ஆட்சி காலத்தில் 1975 ம் ஆண்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக விவசாயிகளிடம் நேரடியாக நெல்லை கொள்முதல் செய்வதற்காக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தொடங்கி வைத்தார். இதனால் விவசாயிகள் தாங்கள் விளைவிக்க கூடிய நெற்மணிகளை இடைத்தரகர்கள் இல்லாமல் விற்பனை செய்ய முடிந்தது. இந்த நிலையில் மத்திய அரசு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தனியார் வசம் ஒப்படைக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு தமிழக அரசும் எதிர்ப்பு தெரிவிக்காமல் தனியாருக்கு தாரை வார்க்க ஆதரவாக இருக்கிறது. இதனை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி கொண்டு வந்த திட்டத்தை திமுக அரசு கைவிடுகிறது என கூறி அவர் பிறந்த ஊரான திருக்குவளையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். மாவட்டச் செயலாளர் சித்தார்தன் தலைமையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய , மாநில அரசுகளை கண்டித்தும், மழையால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிர்களுக்கு காப்பீடு மற்றும் நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதில் அமைப்பின் மாநில துணைத்தலைவர் வி.சுப்ரமணியன், மாவட்டத் தலைவர் எம்.என்.அம்பிகாபதி, பொருளாளர் எஸ்.பாண்டியன் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் உள்பட 100 க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.
No comments