சஞ்சீவ் கோயங்கா உடன் பேசுவதை தவிர்த்த கே.எல். ராகுல்..... வைரலாகும் வீடியோ
ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக மார்க்ரம் 52 ரன் எடுத்தார்.
டெல்லி தரப்பில் முகேஷ் குமார் 4 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 160 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி 17.5 ஓவரில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 161 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 57 ரன் எடுத்தார். இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது முகேஷ் குமாருக்கு வழங்கப்பட்டது.
இந்த போட்டியில் அபாரமாக செயல்பட்டு டெல்லியின் வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றிய கே.எல்.ராகுல் கடந்த சீசனில் லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட்டார். அந்த சீசனில் லக்னோ சிறப்பாக செயல்படாததால் அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவிற்கும், ராகுலுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது.
வீடியோ பார்க்க கிளிக் செய்யவும்
இதையடுத்து ராகுல் லக்னோ அணியில் இருந்து விலகினார். மெகா ஏலத்தில் கலந்து கொண்ட அவரை டெல்லி அணி வாங்கியது. டெல்லியின் கேப்டன் பொறுப்பு வேண்டாம் என கூறி ஒரு வீரராக விளையாடி வருகிறார். இந்நிலையில், நேற்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின்னர் வீரர்கள் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா மற்றும் அவரது மகன் கே.எல்.ராகுலிடம் கை குலுக்கி வாழ்த்து கூறினர். அப்போது, சஞ்சீவ் கோயங்கா ராகுலிடம் பேச முயற்சித்தார். ஆனால், அதை கண்டு கொள்ளாத ராகுல் அவருடனான உரையாடலை தவிர்த்த படி நடந்து சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
No comments