காதலனை விரட்டிவிட்டு இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலி போலீஸ்
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் 20 வயதுடைய பெண், சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். அவர் சென்னையில் இருந்து பஸ்சில் புறப்பட்டு நேற்று முன்தினம் அதிகாலை விழுப்புரம் புதிய பஸ் நிலையத்துக்கு வந்திறங்கினார்.
பின்னர் அவர் அங்கு வந்த காதலனுடன் மோட்டார் சைக்கிளில் ஏறி அருகில் இருந்த ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்கச்சென்றார். அப்போது அவர்களை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த முகமூடி அணிந்த வாலிபர் ஒருவர், திடீரென அவர்கள் இருவரையும் வழிமறித்து, தான் போலீஸ் எனக்கூறி இந்த நேரத்தில் எங்கிருந்து வருகிறீர்கள்?, எங்கு செல்கிறீர்கள் எனக்கேட்டு மிரட்டியுள்ளார்.
மேலும் அவர், அப்பெண்ணின் காதலனை திட்டி தாக்கி மிரட்டி அனுப்பி வைத்துவிட்டு அந்த பெண்ணை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அழைத்துச் சென்றார். செல்லும் வழியிலேயே அந்த நபர், அப்பெண்ணிடம் பணம் பறித்து கொண்டதுடன் மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்தார். உடனே அப்பெண் கூச்சலிட்டதால் அந்த நபர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டார்.
இது குறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் சென்னையில் கார் டிரைவராக பணியாற்றி வரும் விக்கிரவாண்டியை சேர்ந்த லாரன்ஸ் (36) என்பவரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
No comments