செல்போன் பார்ப்பதை கண்டித்ததால் சிறுமி தற்கொலை..... குற்ற உணர்வில் அத்தையும் தற்கொலை.....
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பனிச்சமேடு மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் விஜய் (வயது 25). இவரது மனைவி ஸ்ரீமதி (23). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. விஜய்யின் அக்கா அமலா, செங்கல்பட்டு மாவட்டம் பரமன்கேணி மீனவர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலைக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். அவர்களுக்கு கீர்த்திகா (15) என்ற மகள் இருந்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஏழுமலை இறந்துவிட்டார். இதையடுத்து அமலா தனது மகளுடன் பனிச்சமேடு கிராமத்தில் தம்பி விஜய் வீட்டின் அருகில் குடியேறினார். அருகில் உள்ள தாய்மாமா விஜய் வீட்டில் வளர்ந்து வந்த கீர்த்திகா, அனுமந்தை அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு விஜய், ஸ்ரீமதி, கீர்த்திகா ஆகியோர் வீட்டில் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர். பின்னர் கீர்த்திகா வீட்டின் மாடிக்கு தூங்கச் சென்றார். விஜய், ஸ்ரீமதி ஆகியோர் கீழ்வீட்டில் தூங்கினர்.
நேற்று அதிகாலை மீன்பிடிப்பதற்காக விஜய் கடலுக்கு சென்றுவிட்டார். நீண்ட நேரமாகியும் வீட்டில் இருந்து கீர்த்திகா, ஸ்ரீமதி ஆகியோர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அமலா மற்றும் அக்கம்பக்கத்தினர், வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது வீட்டில் ஸ்ரீமதியும், மாடியில் கீர்த்திகாவும் தூக்கில் பிணமாக தொங்கினர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், மரக்காணம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், நேற்று முன்தினம் இரவு சாப்பிடும்போது, 'செல்போனில் அதிக நேரத்தை வீணாக்காதே' என்று கீ்ர்த்திகாவை ஸ்ரீமதி கண்டித்துள்ளார். 10-ம் வகுப்பு என்பதால் படிப்பில் கவனம் செலுத்துமாறு அறிவுரை கூறியுள்ளார். இதனால் விரக்தி அடைந்த கீர்த்திகா, வீட்டின் மாடியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதைப் பார்த்த ஸ்ரீமதி, தான் திட்டியதால் தான் கீர்த்திகா இறந்துவிட்டார் என்று கருதி அவரும் தற்கொலை செய்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
No comments