பாகிஸ்தானுடன் கைகோர்த்த அமெரிக்கா..... இந்தியாவை கிண்டலடித்த டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அமெரிக்காவின் பொற்காலம் மீட்கப்படும் வகையிலான நடவடிக்கையை எடுப்பேன் என தெரிவித்த அவர், சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு எதிராக கடுமையான வரி விதிப்புகளை அமல்படுத்தி உத்தரவிட்டார்.
இந்நிலையில், பிரேசில் நாட்டுக்கு மொத்தம் 50 சதவீத வரி விதிப்பதற்கான உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார். இதுபற்றிய அந்த உத்தரவில், பிரேசில் அரசின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள், அமெரிக்க வர்த்தகத்தில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தியது. அமெரிக்க குடிமக்களின் சுதந்திர பேச்சுரிமையையும் அது பாதித்து உள்ளது. அமெரிக்க வெளியுறவு கொள்கை மற்றும் பொருளாதார நலன்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது என தெரிவிக்கின்றது.
இதேபோன்று, இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். அந்த கையோடு, பாகிஸ்தானுடனான வர்த்தக ஒப்பந்தம் பற்றிய அறிவிப்பு ஒன்றையும் டிரம்ப் வெளியிட்டார்.
அவர் கூறும்பேது, பாகிஸ்தான் நாட்டுடன் நாங்கள் ஒப்பந்தம் ஒன்றை முடிவு செய்துள்ளோம். இதன்படி, பாகிஸ்தானிலுள்ள பெரிய அளவிலான எண்ணெய் இருப்புகளில் இருந்து எண்ணெய் எடுக்கும் பணியை இணைந்து மேற்கொள்ள இருக்கிறோம். இதற்காக எண்ணெய் நிறுவனம் தேர்வு செய்யும் நடைமுறையில் ஈடுபட்டு இருக்கிறோம்.
யாருக்கு தெரியும், ஒரு நாள் அவர்கள் இந்தியாவுக்கு கூட எண்ணெய்யை விற்பனை செய்ய கூடும் என்று கிண்டலாக கூறினார். இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பு மற்றும் கூடுதல் அபராதம் ஆகியவற்றை விதித்து டிரம்ப் உத்தரவிட்டார். அது ஆகஸ்டு 1 முதல் அமலுக்கு வர இருக்கிறது.
எனினும், வரி குறைப்புக்காக அமெரிக்காவுடன் பல நாடுகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார். இதில், இந்தியாவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, தென்கொரியா (25 சதவீத வரி விதிப்பு) வர்த்தக குழுவுடன் இன்று மதியம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன் என்றும் டிரம்ப் குறிப்பிட்டு உள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போரை நானே தடுத்து நிறுத்தினேன் என்று விடாமல் டிரம்ப் கூறி வரும் நிலையில், பாகிஸ்தானுடன் அமெரிக்கா கைகோர்த்துள்ளது.
No comments