• Breaking News

    செய்தியாளர்களை தாக்கிய மதிமுக தொ(கு)ண்டர்கள்..... வருத்தம் தெரிவித்த துரை வைகோ.....


    சாத்துாரில் ம.தி.மு.க., கூட்டத்துக்கு செய்தி சேகரிக்கச்சென்ற செய்தியாளர்கள், காலி நாற்காலிகளை படம் பிடித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த வைகோ, அவர்களை தாக்கும்படி தொண்டர்களுக்கு மேடையில் உத்தரவிட்டார். இதையடுத்து பாய்ந்து சென்ற ம.தி.மு.க., தொண்டர்கள் , படம் பிடித்த செய்தியாளர்களை சரமாரியாக தாக்கி, கேமராக்களை பறித்துக் கொண்டனர்.

    இது தொடர்பாக, செய்தியாளர்கள் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட செய்தியாளர்களிடம் வைகோ நேரில் சென்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    இந்நிலையில் நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து துரை வைகோ வெளியிட்ட அறிக்கை; செய்தியாளர்கள், ஊடகவியலாளர்கள் அனைவரிடமும் நட்புறவு கொண்டு பழகும் பண்பு நலன் கொண்டவர் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ என்பது நாடறிந்த உண்மை.

    நேற்று மாலையில் நெல்லை மண்டல ம.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம் சாத்தூரில் நடந்தது. மூன்றாயிரம் பேர் திரண்டு வந்ததால் மண்டபம் நிறைந்து, வெளியே ஆயிரக்கணக்கானோர் அமர்ந்து இருந்தனர்.

    வைகோ இரவு 8 மணிக்கு பேசத் தொடங்கி ஒரு மணி நேரத்தில் மின்சாரம் தடைபட்டதால் மண்டபத்துக்கு உள்ளே இருந்த தொண்டர்கள் சிலர் எழுந்து வெளியே சென்றனர். சற்று நேரத்தில் மின்சாரம் வந்ததும் தலைவர் பேசத் தொடங்கினார்.

    அந்த நேரத்தில் ஊடகவியலாளர்கள் ஒளிப்பதிவு செய்ததை பார்த்த வைகோ , 'மாலை நான்கு மணி அளவில் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் ஐந்து மணி நேரமாக உள்ளே அமர்ந்திருக்கின்றனர்.மின்சாரம் தடைப்பட்டதும் சற்று நேரம் வெளியே சென்றபோது படம் எடுக்கிறீர்களே, வெளியே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நிகழ்ச்சியை கேட்டுக் கொண்டிருக்கிறார்களே, அங்க போய் படம் எடுப்பீர்களா? 'என்று கேட்டார்.

    தொடர்ந்து ஒளிப்பதிவு செய்ததால் ஊடகவியலாளர்கள் வெளியே செல்லலாம் என்று தலைவர் அறிவுறுத்திய போது சில தொண்டர்கள் ஆத்திரமடைந்தனர். அதன் பின்னர் நடந்தவை விரும்பத் தகாதது ஆகும்.

    ம.தி.மு.க.,வின் 31 ஆண்டுகால வரலாற்றில் செய்தியாளர்களிடம் தொண்டர்கள் இவ்வாறு என்றும் நடந்து கொண்டது இல்லை. கட்சி அலுவலகத்தில் ஒரு ஊடகவியலாளர், தன் நேர்மையான பொது வாழ்க்கை குறித்து அவதூறான கேள்வி எழுப்பிய போதும் நேர்காணலை நிறுத்திவிட்டு அவரை பாதுகாப்பாக வெளியேற ஏற்பாடு செய்தவர் வைகோ .

    செய்தியாளர்களை நான் சந்திக்கும் போதெல்லாம் தோழமை உணர்வோடு தான் பழகி வருகிறேன். எந்த கேள்வி எழுப்பினாலும் இன்முகம் காட்டியே பதில் கூறுகின்றேன்.

    ஜனநாயகம் செழிக்க வேண்டுமானால் பத்திரிக்கை சுதந்திரம் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் ம.தி.மு.க.,வின் கருத்து ஆகும்.

    சாத்தூரில் நடந்த நிகழ்வுக்கு , தனிப்பட்ட முறையிலும் கட்சியின் சார்பிலும் பத்திரிக்கை ஊடக நண்பர்களிடம் எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு துரை வைகோ தெரிவித்துள்ளார்.

    No comments