தைவானில் ரகசா புயல்..... ஏரி, பாலம் உடைந்து 14 பேர் பலி....


 தைவானில் கடந்த திங்கட்கிழமை முதல் ரகசா புயல் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த புயல் தற்போது சீனாவின் தெற்கு கடலோர பகுதியை நோக்கி செல்கிறது. ஹாங்காங்கையும் தாக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தைவானின் கிழக்கே ஹுவாலியன் கவுன்டி பகுதியை புயல் தாக்கியது. இதனால், தைவானில் 70 செ.மீ. அளவுக்கு மழைப்பொழிவு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், தொடர் கனமழையால் மலை பகுதியில் அமைந்த ஏரி ஒன்று உடைந்தது. பாலம் ஒன்றும் சேதமடைந்தது. இதனால் ஏரியில் இருந்து 60 மில்லியன் டன் அளவிலான நீர் வெளியேற்றப்பட்டது.

ஒலிம்பிக் நீச்சல் குளம் போன்று 36 ஆயிரம் நீச்சல் குளங்களை நிரப்பும் அளவுக்கு அந்த ஏரியின் நீர் கொள்ளவு 91 மில்லியன் டன்னாக உள்ளது. ஏரியில் இருந்த வெள்ள நீர் குவாங்பு நகருக்குள் புகுந்து நகரையே புரட்டி போட்டது. இதில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர். 30 பேரை காணவில்லை.

வீடுகள், குடியிருப்புகள் என கிராமம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால், குடியிருப்புவாசிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பரிதவித்து வருகின்றனர்.

வெள்ள பாதிப்பு பற்றி கிராம தலைவர் வாங் சே-ஆன் கூறும்போது, ஆயிரம் பேர் வசிக்க கூடிய தமா கிராமம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. எங்களுக்கு நிவாரண பொருட்கள் உடனடி தேவையாக உள்ளது. மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும்.

அவர்களை முகாம்களில் தங்க வைக்க வேண்டும் என கூறினார். சிலர் தங்களுடைய வீடுகளின் மேற்கூரை பகுதிக்கு சென்று தஞ்சமடைந்தனர். எனினும், வெள்ள நீர் வடியாமல் உள்ளது. புயல் சீனாவை நோக்கி செல்கிறது.

2009-ம் ஆண்டு மொராகோட் புயல் தாக்கியதில் தெற்கு தைவான் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. 700 பேர் உயிரிழந்தனர். 300 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு சேதம் ஏற்பட்டது.

Post a Comment

0 Comments