• Breaking News

    நடுவர் மீது குற்றச்சாட்டு..... பாகிஸ்தானின் கோரிக்கையை நிராகரித்த ஐசிசி

     


    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் கடந்த 14-ந்தேதி துபாயில் நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் புரட்டியெடுத்தது. ஆட்டம் முடிந்ததும் இந்திய வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்தனர். முன்னதாக ‘டாஸ்’ போடும் போதும், இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆஹாவிடம் கைகுலுக்குவதை தவிர்த்தார்.

    போட்டி நடுவர் பைகிராப்ட் (ஜிம்பாப்வே), டாஸ் நிகழ்ச்சியில் எதிரணி கேப்டனுடன் கைகுலுக்கக்கூடாது என சல்மான் ஆஹாவிடம் கூறியிருக்கிறார். இதன் மூலம் அவர் ஐ.சி.சி. மற்றும் எம்.சி.சி. கிரிக்கெட் விதிகளுக்கு முரணாக நடந்து கொண்டுள்ளார். எனவே அவரை ஆசிய போட்டிக்கான நடுவர் குழுவில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) கடிதம் எழுதியது. ஆன்டி பைகிராப்ட், இந்தியாவுக்கு சாதகமாக செயல்பட்டார் என்பதே பாகிஸ்தானின் குற்றச்சாட்டு.

    ஆனால் விசாரணையில், ‘ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அதிகாரிகள் தான், தற்போதைய சூழலில் டாஸில் கைகுலுக்கும் நடைமுறை வேண்டாம் என முடிவு செய்து பைகிராப்டிடம் அறிவுறுத்தியுள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய இயக்குனருக்கு கூட முன்கூட்டியே இது தெரியும். மற்றபடி இதில் பைகிராப்ட்டின் தவறு எதுவும் இல்லை’ என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை நீக்க வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை ஐ.சி.சி. நிராகரித்து விட்டது. அது குறித்து பாகிஸ்தானுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    போட்டி நடுவரை நீக்காவிட்டால், ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இருந்து பாகிஸ்தான் விலகக்கூடும் என தகவல்கள் வெளியாகின. அவ்வாறு விலகினால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ரூ.140 கோடி வரை வருவாயை இழக்க வேண்டி வரும். அத்துடன் ஐ.சி.சி.யின் கடுமையான நடவடிக்கைக்கும் உள்ளாக நேரிடும் என்பதால், அந்த முடிவை கைவிட்டு, அடுத்த ஆட்டத்திற்கு பாகிஸ்தான் தயாராகி வருகிறது.

    No comments