மன்னிப்பு கேட்பது போன்று என்னிடம் நகராட்சி ஊழியர் தவறாக நடந்துகொண்டார்...... பெண் கவுன்சிலர் போலீசில் பரபரப்பு புகார்.....
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரோஷணை காலனி பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம் மகன் முனியப்பன் (வயது 36). இவர் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 29-ந்தேதி நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் அறையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி நேற்று முன்தினம் இரவு வெளியானது. அந்த காட்சியில் ஆணையர் அறையில் நகராட்சி அலுவலர்கள் மற்றும் தி.மு.க. கவுன்சிலர் ரம்யா உள்பட பலர் இருந்தனர். அப்போது, இளநிலை உதவியாளர் முனியப்பன் திடீரென, கவுன்சிலர் ரம்யாவின் அருகே சென்று அவரது காலில் விழுந்தார்.
தொடர்ந்து அவர் முன்பு கையெடுத்து கும்பிட்டு பேசுவது போன்ற வீடியோ பதிவாகி இருந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி, வைரலாகி வருவதுடன், கடும் விமர்சனத்துக்கும் உள்ளாகி உள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தி.மு.க. கவுன்சிலர் ரம்யா திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கடந்த 29-ந்தேதி மதியம் 2.45 மணி அளவில் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்திற்கு பணி சம்பந்தமாக சென்று இருந்தேன். அப்போது நகராட்சியில் பணிபுரியும் முனியப்பன் கோப்புகளை தேடிக்கொண்டிருந்தார். நான் அவரிடம் அலுவலக பணியாளர் மகா என்பவரை உதவிக்கு வைத்துக்கொண்டு தேடுமாறு கூறினேன். அதற்கு முனியப்பன் என்னை தகாத வார்த்தைகளால் திட்டி, ஒருமையில் பேசினார். ஏன் ஒருமையில் பேசுகிறீர்கள் மரியாதையாக பேசுங்கள் என தெரிவித்தேன்.
இந்தநிலையில் ஆணையாளர் அழைத்ததால் அவர் அறைக்கு சென்றேன். அப்போது முனியப்பன் நடந்து கொண்ட விதம் தொடர்பாக வாய்மொழி புகாராக நகராட்சி ஆணையாளரிடம் தெரிவித்தேன். அவர் எழுத்துப்பூர்வமாக கொடுங்கள் என தெரிவித்தார். மாலை 5 மணி அளவில் எழுத்துப்பூர்வமாக புகார் எழுதிக்கொடுக்க சென்றேன்.
அங்கு மற்ற அலுவலர்களும் இருந்தார்கள். ஆனால் அங்கு ஆணையாளர் இல்லாததால், அவருக்காக காத்திருந்தேன். அப்போது நான் புகார் மனு எழுதிக்கொண்டு வந்ததை பார்த்த அதிகாரிகள், முனியப்பனை வரவழைத்து நீங்கள் அவர் மீது புகார் அளித்தால் அவரது பதவி உயர்வில் பாதிப்பு ஏற்படும், எனவே புகார் அளிக்க வேண்டாம் என்று தெரிவித்தனர்.அவ்வாறு பேசிக்கொண்டு இருக்கும் போதே, திடீரென முனியப்பன் தானாக மன்னிப்பு கேட்பதாக எனது காலில் விழுவது போல் விழுந்து, அவரது இடது கையால் என் இடுப்பின் பின்புறம் கையால் அறுவறுக்கத்தக்க வகையில் தவறாக நடந்து கொண்டார். அவரை எழுந்திருக்குமாறு நான் மற்றும் அங்கிருந்த மற்ற அலுவலர்கள் கூறியும் அவர் எழுந்திருக்கவே இல்லை. பின்னர் நான் சுதாரித்துக் கொண்டு நாற்காலியை நகர்த்தி போட்டு உட்கார்ந்தேன். தவறாக நடந்த முனியப்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments