காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் பிரசித்திபெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இது அருணகிரிநாதரால் எட்டு திருப்புகழ் பாடப்பெற்ற சிறப்பு பெற்றது.தேவர்களுக்கு தீங்கிழைத்து வந்த வல்லன் எனும் அசுரனை அழித்து முருகப்பெருமான் எழுந்தருளியதால் வல்லக்கோட்டை என்று வழங்கப்படும் இத்தலத்திற்குக் கிருத்திகை, விசாகம், சஷ்டி, செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் வந்து வழிபடுவோருக்கு சொந்த வீடுமனை, திருமணம், பதவி உயர்வு, வளமான வாழ்வு கிடைப்பதாக ஐதீகம்.
தேவர்களின் பொருட்டு வல்லன் எனும் அசுரனை இத்தலத்தில் முருகப்பெருமான் அழித்து காட்சியருளியதால் இங்கு ஆண்டுதோறும் சூரசம்கார உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது.ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இத்தலத்தில் கந்தசஷ்டி உற்சவம் கடந்த 22ஆம்தேதி தொடங்கி ஏழு நாட்கள் விமரிசையாக நடைபெற்று முடிந்தது.நாள்தோறும் மூலவருக்கு சிறப்பு மகா அபிஷேகமும் உற்சவர் ஆறுமுகப்பெருமானுக்கு சத்ருசம்கார திரிசதீ அர்ச்சனை, விசேஷ யாகபூஜைகளும் நடைபெற்று வந்தன.
உற்சவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி வெவ்வேறு அலங்காரங்களில் காட்சியளித்து வந்தார்.முக்கிய உற்சவமாகிய சூரசம்காரம் திங்களன்று மாலை விமரிசையாக நடைபெற்றது.இந்நிலையில் இந்திரனின் மகளாகிய தெய்வானை தேவியை கரம்பிடிக்கும் கல்யாண உற்சவம் செவ்வாயன்று மாலை நடைபெற்றது.
கந்தசஷ்டி ஆறுநாட்களும் சத்ருசம்கார திரிசதீ அர்ச்சனை நடைபெற்று வந்த சண்முகருக்கு செவ்வாயன்று காலை சாந்தி யாகமும் சாந்தி பூஜைகளும் நடைபெற்றன. சிறப்பு மலர் அலங்காரத்தில் சண்முகர் அருள்பாலித்தார்.பிற்பகலில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சாந்தி அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. மாலை 5.30 மணிக்கு கல்யாண உற்சவம் நடைபெற்றது. சுப்பிரமணிய சுவாமி ரத்தினாங்கி சேவையில் எழுந்தருளினார்.
திருக்கோயில் அர்ச்சகர் சந்திரசேகர குருக்கள் தலைமையில் மந்திரங்கள் ஓதிட மங்கல வாத்தியங்கள் முழங்கிட மாங்கல்யதாரணம் நடைபெற்றது. பக்தர்கள் அரோகரா அரோகரா என்று கோஷங்கள் எழுப்பி பெருமானை வணங்கினர். திருமணமாகாத ஏராளமான ஆண்களும் பெண்களும் இந்த உற்சவத்தில் கலந்து கொண்டனர்.மேலும் சஷ்டி விரதமிருந்த ஏராளமான பக்தர்கள் காலையில் கோயிலுக்கு வந்திருந்து பெருமானை வணங்கி விரதத்தினை நிறைவு செய்தனர்.
சுமார் 500 க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் அறுசுவை உணவு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு உற்சவர் சுப்பிரமணிய சுவாமி கல்யாண கோலத்துடன் வண்ண வான வேடிக்கைகளுடன் வல்லக்கோட்டை கிராமத்தில் திருவீதி உலா வந்தார்.
தொடர்ந்து ஏழுநாட்கள் நடைபெற்று முடிந்த கந்தசஷ்டி உற்சவத்திற்கான ஏற்பாடுகளை மண்டல இணை ஆணையர் திரு.சி.குமரதுரை அவர்கள் அறிவுரைப்படி, திருக்கோயில் நிர்வாக அதிகாரி சோ.செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் ஜா.செந்தில்தேவ்ராஜ், அறங்காவலர்கள் த.விஜயகுமார், கலைச்செல்வி கோபால், கே.மோகனகிருஷ்ணன், பு.செல்வகுமரன் ஆகியோர் செய்திருந்தனர்.



0 Comments