திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை நல்லதண்ணீர்குளம் தெருவைச் சேர்ந்த கணேசன் (56) அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்தார். கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி காலை, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது பாம்பு கடித்து உயிரிழந்ததாக, அவரது மகன் பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதனையடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது, கணேசனின் குடும்பத்தினர் கூறிய தகவல்களில் முன்னுக்குப் பின் முரண்பாடுகள் இருந்ததால் சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனம் வடக்கு மண்டல காவல் துணைத் தலைமை ஆய்வாளர் (ஐ.ஜி) அஸ்ரா கார்க்கிடம் புகார் அளித்தது.மேலும் விசாரணையில், கணேசன் பெயரில் ரூ.3 கோடி மதிப்புள்ள காப்பீட்டு திட்டங்கள் இருந்தது தெரியவந்தது. அந்த காப்பீட்டு தொகையைப் பெறும் நோக்கில், கணேசனின் மகன்கள் மோகன்ராஜ், ஹரிஹரன் ஆகியோர், மணவூரைச் சேர்ந்த பாலாஜி (28), பிரசாந்த் (35), நவீன் குமார் (28) மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் மோசூர் கிராமத்தைச் சேர்ந்த தினகரன் (28) ஆகியோருடன் இணைந்து, தங்களது தந்தையின் கழுத்தில் கட்டுவிரியன் பாம்பை கடிக்க வைத்து கொலை செய்தது உறுதியானது.
இதனையடுத்து, மோகன்ராஜ், ஹரிஹரன் உள்ளிட்ட ஆறு பேரை காவல் துறையினர் கைது செய்தனர். காப்பீட்டு பணத்திற்காக மகன்களே தந்தையை பாம்பால் கடிக்க வைத்து கொலை செய்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments