திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பி.என்.கண்டிகை கிராமத்தை சேர்ந்த ஜனா 19 தனியார் பொறியியல் கல்லூரியில் 3ஆம் ஆண்டு ஈ.சி.ஈ. பயின்று வந்தார். செமஸ்டர் விடுமுறை என்பதால் பிற்பகல் ஜனா அவர்களது விளை நிலத்தில் நெற்பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால் கல்லூரி மாணவன் ஜனா மின்சாரம் பாய்ந்து சேற்றில் சிக்கி உள்ளார். சேற்றில் சிக்கியதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று கல்லூரி மாணவனை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மாணவன் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடற்கூறு ஆய்விற்காக மாணவன் சடலத்தை கைப்பற்றி பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பொன்னேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக கல்லூரி மாணவன் உயிரிழந்ததாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். 40 - 50 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட மின்சார வயர்கள் சிதிலமடைந்துள்ள நிலையில் பலமுறை புகார் அளித்தும் மின்வாரிய அதிகாரிகள் அவற்றை அப்புறப்படுத்தி புதிய வயர்களை சீரமைக்காததால் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் உயிரிழப்புகள் ஏற்படாத வகையில் புதிய மின்கம்பிகள் அமைத்து, தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
பொறியியல் கல்லூரி மாணவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதனை அறிந்த அதிமுக பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன் ராஜா மீஞ்சூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜி எஸ் வினோத் ஆகியோர் நெரில் சென்று ஆறுதல் கூறியதோடு முன்னாள் எம்எல்ஏ பொன்.ராஜா தமிழ்நாடு மின்சாரம் வாரியம் அலட்சிய போக்கோடு செயல்படுவதால் இது போன்ற உயிரிழப்பு அடிக்கடி நடைபெறுவதாகவும் மேலும் மின்சார வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாண்புமிகு அம்மாவின் ஆட்சியிலும் தொடர்ந்து எடப்பாடியார் ஆட்சியின் போது மின் உயிரிழப்புக்கள் பலவற்றை கட்டுப்படுதபட்டுள்ளதாகவும் ஆனால் தற்போது திராவிடம் மாடல் ஆட்சியில் வரலாறு காணாத அளவில் மின் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் இதனைக் கட்டுப்படுத்த இந்த அரசு முன்வர வேண்டும் என அப்போது அவர் கோரிக்கை விடுத்தார். மேலும் உயர்ந்த குடும்பத்திற்கு போதிய இழப்பீடு வழங்க வேண்டும் என அப்போது அவர் கோரிக்கை வைத்தார்.

0 Comments