கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் விழாவையொட்டி கடற்கரை சாலையில் உள்ள பனிமயமாதா ஆலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவிற்கு பனிமய மாதா பங்கு தந்தை ஸ்டார்வின் தலைமை வகித்தார்.
பனிமய மாதா ஆலய வளாகத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் கண்கவரும் வகையில் நடைபெற்றது. வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நிகழ்ச்சியை கண்டுகளித்தார். பின்னர் அப்பகுதியில் உள்ள 2 பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அமைச்சர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்: இந்த பனிமய மாதா ஆலயத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கு கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். காரணம் பனிமய மாதாவின் வரலாறு மிகவும் முக்கியமானதாகும். எல்லா தரப்பினரும் இந்த ஆலய திருவிழாவிற்கு தமிழகம், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இருந்து வந்து செல்கின்றனர். எவ்வித ஏற்றத்தாழ்வும் இல்லாத அன்னையின் அருள் எல்லோருக்கும் கிடைத்திட வேண்டும். ஏழை எளியவர்களுக்கு உதவிகள் செய்வது கடவுளுக்கு செய்யும் சேவையாகும். நாம் செய்கின்ற ஓவ்வொரு நல்ல உதவிகளும் அன்பும் தான் எல்லோரையும் அரவணைத்து நல்லவழிகளுக்கு நம்மை அழைத்து செல்லும். இந்தியாவில் அதிக அளவில் பெண்கள் உழைக்கும் மாநிலம் தமிழ்நாடுதான்.
கடலுக்குச் சென்று தொழில் செய்பவர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான கஷ்டங்களை கடந்த வாழ்ந்து வருகின்றனர். அவர்களது வாழ்வில் ஒளிவிளக்கேற்றும் வகையில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மீன்பிடி தடைக்காலத்தில் வழங்கப்படும் உதவித்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. டீசல் மானியம் வழங்கப்படுகிறது. மீன்பிடி துறைமுகத்தில் பல்வேறு கட்டமைப்பு பணிகளை உருவாக்கிக் கொடுத்துள்ளோம். எப்போதெல்லாம் திமுக ஆட்சி அமைகிறதோ அதுதான் மக்களுக்கான ஆட்சியாக இருந்து வருகிறது. ஒவ்வொரு திட்டங்களையும் திட்டமிட்டு செயல்படுத்தி வருவதன் மூலம் இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது.
எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியில் தமிழக மக்கள் பயனடைந்து வருகின்றனர். சிறுபாண்மை மக்களின் அரணாக திமுக எப்போதும் இருக்கும். திமுகவை பொறுத்தவரை எல்லா மதத்தையும் மதிக்கிறோம். மதவெறியைத்தான் எதிர்க்கிறோம். நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறி சமத்துவத்தை உருவாக்குவோம். திமுக அரசுக்கு முழுமையான ஆதரவை தொடர்ந்து நீங்கள் வழங்க வேண்டும் என்று பேசினார்.
விழாவில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், வட்டச்செயலாளர் டென்சிங், மாநகர திமுக இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், வட்டப்பிரதிநிதி பாஸ்கர், பகுதி தகவல் தொழிற்நுட்ப அணி அமைப்பாளர் சுரேஷ்குமார், மற்றும் கமலி, நிர்மலா உள்பட பாதிரியார்கள், திருச்சபை ஊழியர்கள், இளைஞரணியினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


0 Comments