திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த கன்னியம்மன் நகர், சமயபுரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (39 வயது). பெயிண்டர் வேலை செய்து வந்தார். இவரது மனைவி மகேஸ்வரி (29 வயது). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மது பழக்கத்துக்கு அடிமையான ராஜேஷ்குமார் அடிக்கடி குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த ராஜேஷ்குமார், தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ராஜேஷ்குமார், மகேஸ்வரியின் கழுத்தில் இருந்த தாலி சங்கிலியை பிடித்து இழுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மகேஸ்வரி அருகில் இருந்த கேபிள் ஒயரை எடுத்து அவரது கழுத்தில் சுற்றி இறுக்கியதாக கூறப்படுகிறது. இதில் மூச்சுத்திணறி ராஜேஷ்குமார் மயங்கி விழுந்தார். இதையடுத்து மகேஸ்வரி ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு ஆம்புலன்சில் வந்த நர்சுகள் ராஜேஷ்குமாரை பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் ராஜேஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்த கணவரை கொன்றதாக மகேஸ்வரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 Comments