இராமநாதபுரம் மாவட்டம், கமுதி -கோட்டைமேட்டில் உள்ள ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விழாவை முன்னிட்டு, புலி வாகனத்தில் ஐயப்ப சுவாமி ரத ஊர்வலம் நேற்று இரவு நடைபெற்றது.சபரிமலை ஐயப்பனுக்கு,இக் கோவிலில் இருந்து செல்லும் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் 1-ம் தேதி முதல் மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதம் இருந்து வருகின்றனர். மேலும் இக் கோவிலில் வாரத்தில் சனிக்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. தற்போது கமுதி - கோட்டைமேடு ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் இன்று மண்டல பூஜை நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு நேற்று இரவு மின்னொளி அலங்கார ரதத்தில் ஊர்வலமாக புலி வாகனத்தில் பக்தர்களுக்கு ஐயப்பன் அருள்பாலித்தார். வானவேடிக்கை, கேரள செண்டை மேளம், மேளதாளங்களுடன் புலி வாகனத்தில் வில் அம்புடன், கோட்டைமேடு மற்றும் கமுதி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்று ரதம் மீண்டும் கோயிலை வந்தடைந்தது. ஐயப்ப சுவாமியை வழிநெடுகிலும் தாம்பூல தட்டில் பூஜை பொருள்களுடன் பக்தர்கள் வரவேற்றனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை குருநாதர் லெட்சுமணன் தலைமையில் ஐயப்ப பக்தர்கள் செய்தனர்.


0 Comments