நாகை: திருப்பூண்டியில் காவு வாங்க காத்திருக்கும் பழமையான நீர்த்தேக்க தொட்டி...... இடித்துவிட்டு புதிய தொட்டி கட்ட கோரிக்கை......

 


நாகை மாவட்டம், திருப்பூண்டி மேற்கு ஊராட்சியில், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, தற்போது எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடிய ஆபத்தான நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் தொடர்ந்து பெய்த  மழையின் தாக்கத்தால், நீர்த்தேக்க தொட்டியின் கான்கிரீட் அமைப்புகளில் விரிசல், மேற்பகுதி சிதைவு, இரும்புக் கம்பிகள் வெளிப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் உயிர் பாதுகாப்பு குறித்து கடும் அச்சத்தில் உள்ளனர்.

இந்த நீர்த்தேக்க தொட்டி திடீரென இடிந்து விழுந்தால்,அருகிலுள்ள வீடுகள் சேதமடையும் அபாயம் இருப்பதோடு மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் முற்றிலும் பாதிக்க கூடும் அபாயம் உள்ளது. மேலும் அந்த வழியேபள்ளி செல்லும் குழந்தைகள், பெண்கள், முதியவர்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அப்பகுதி  மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.குறிப்பாக, மழைக்காலங்களில் தொட்டி முழுமையாக நிரம்பும் போது, அதன் எடையை தாங்க முடியாமல் பெரும் விபத்து நிகழ வாய்ப்பு அதிகம் இருப்பதாக அப்பகுதியினர் எச்சரிக்கின்றனர்.

ஆபத்தான நிலையில் உள்ள பழைய நீர்த்தேக்க தொட்டியை உடனடியாக இடித்து அகற்றவும், புதிய, பாதுகாப்பான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி தரவும்அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து திருப்பூண்டி மேற்கு ஊராட்சி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பிய போது,

பழைய நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்றுவதற்கும், புதிய தொட்டி கட்டுவதற்குமான திட்ட முன்மொழிவு (Proposal) உரிய அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் விரைவில் பணிகள் தொடங்கப்படும்”என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments