தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி) யில் நுகர்வோர் மன்றத்தின் சார்பில் “நிலையான நுகர்வு: நம் பொறுப்பும் நம் எதிர்காலமும்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி, 19.12.2025 அன்று நடத்தப்பட்டது. பொறுப்புள்ள நுகர்வு நடைமுறைகள் மற்றும் நிலையான எதிர்காலத்தை உறுதி செய்வதில் மாணவர்களின் பங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாக இருந்தது.
இந்நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக முனைவர். ஷைலா, உதவி பேராசிரியர், வ. உ. சிதம்பரம் கல்லூரி, தூத்துக்குடி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தனது உரையில், நிலையான நுகர்வு என்ற கருத்தை விளக்கி, சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் நெறிமுறை சார்ந்த நுகர்வு நடைமுறைகளை ஊக்குவிப்பதில் தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் சமூகத்தின் கூட்டு பொறுப்பை வலியுறுத்தினார். நீண்டகால நிலைத்தன்மையை அடைவதில் தகவலறிந்த நுகர்வோர் நடத்தையின் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக நாம் மாடித் தோட்டம் அமைத்து சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும் மேலும், தேவைக்கு அதிகமான பொருட்களை கொள்முதல் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறினார்கள். இச்சிறப்புரை மிகுந்த தகவல்களையும் ஊக்கத்தையும் வழங்கி, மாணவர்கள் தங்களின் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையில் பொறுப்புள்ள நுகர்வு பழக்கங்களை ஏற்க ஊக்கமளித்தது.
இந்நிகழ்வானது கல்லூரி செயலர். அருட்சகோதரி. முனைவர். குழந்தை தெரஸ், கல்லூரி முதல்வர்.அருட்சகோதரி. முனைவர். ஜெஸி பெர்ணான்டோ , துணை முதல்வர் அருட்சகோதரி. முனைவர். எழிலரசி ஆகியோரின் வழிகாட்டுதலின் படி நடைபெற்றது. இந்நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை நுகர்வோர் மன்ற மாணவிகள் சிறப்புற செய்தனர்.


0 Comments