சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்திற்குட்பட்ட 9 கண்மாய்களில் ஈரநிலப் பறவைகள் கணக்கெடுப்பை வனத்துறையினர் நடத்தினர். நீர்நிலைகள் சார்ந்த ஈரநிலம் மற்றும் நிலப்பறவைகள் என்று இருவிதமாக கணக்கெடுப்பு வனத்துறையினர் ஆண்டுதோறும் நடத்தி வருகின்றனர். அதனடிப்படையில் இன்று வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் அதிகமாக வலைசை போகும் கண்மாய்களில் தேர்வு செய்யப்பட்ட கொள்ளுகுடிப்பட்டி கண்மாய், வேட்டங்குடி, மாதவரயான்பட்டி, சித்த கண்மாய், அய்யாபட்டி கண்மாய் உள்ளிட்ட பகுதிகளில் 9 கண்மாய்களில் பறவைகள் கணக்கெடுப்பு காலை முதல் மேற்கொள்ளப்பட்டது.
இங்கு ஆண்டுதோறும் செப்டம்பா், அக்டோபர் மாதங்களில் பிற ஆசிய நாடுகள், ஐரோப்பிய நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து 8,000-க்கும் மேற்பட்ட பறவைகள் வருகின்றன. அவை கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சுகள் பொறித்து இனப்பெருக்கம் செய்கிறது. மீண்டும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் குஞ்சுகளுடன் தங்களது இருப்பிடங்களுக்கு திரும்பிச் சென்றுவிடும். இதன் அடிப்படையில் இன்று நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பு முகாமில் திருப்பத்தூர் அப்சா கல்லூரி, காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர். கல்லூரி மாணவ, மாணவிகளின் தனித்திறனை வெளிக்கொணரும் வகையில் வனஉயிரினங்களின் வாழ்விடம், இடப்பெயா்வு, பறவைகளின் நிலை பற்றிய விவரத்தை அறிந்துகொள்வது அவசியம் என்பதால் கல்லூரி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. வனத்துறை மாணவர்கள் சாா்பில் 9 குழுக்களாகப் பிரிந்து பறவைகள் கணக்கெடுப்புப் பணியினை மேற்கொண்டனர். அருகில் உள்ள பறவைகளை கண்களால் பார்வையிட்ட மாணவர்கள் தொலைவில் உள்ள பறவைகளை தொலைநோக்கி மூலமூம், மெர்லின் செயலி மூலமும் பறவைகளின் ஒலிகளை அடையாளம் கண்டு பார்வையிட்டு கணக்கெடுத்தனர்.
இதில் நத்தை கொத்தி நாரை, அரிவாள் மூக்கன், பாம்புதாரா, மஞ்சன் மூக்கன் நாரை, உண்ணி கொக்கு, முக்குளிப்பான், நீலச்சிறவி, சாம்பல் நிற நாரை, கரண்டிவாயன் உள்ளிட்ட பல்வேறு வகையான பறவையினங்கள் கண்டறியப்பட்டது தெரியவந்துள்ளது. ஆங்காங்கே பல வெளிநாட்டுப் பறவைகளும் தென்பட்டதாக மாணவர்கள் கணக்கெடுப்பில் கூறப்பட்டுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான பறவைகள் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாக மாணவர்கள், ஆய்வுக்குழுவினர் பதிவு செய்தனர். முழுமையான விவரம் மாலையில் அறிவிக்கப்படும் என வனத்துறை மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.


0 Comments