ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வரை வகுப்புகள் உள்ளன. 600 க்கும் அதிகமான மாணவிகள் படிக்கின்றனர். பள்ளியின் தெற்கு பகுதியில் உள்ள காம்பவுண்ட் சுவர் சுமார் 100 மீட்டர் அளவிற்கு இடிந்து விழுந்துள்ளது. இதுகுறித்து சாயல்குடியை சேர்ந்த பொதுமக்கள் இதுகுறித்து கூறியதாவது சாயல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மைதானம் புதர்மண்டியுள்ளது. தெற்கு பகுதியில் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகியுள்ளது இதனால் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. மேலும் அப்பகுதியில் கால்நடை வளர்ப்போர் ஆடு மாடுகளை திறந்து விடுவதால் எல்லா நேரங்களிலும் மைதானத்திற்குள் கால்நடைகள் வந்து மேய்ந்து வருகின்றன.
இதன் அருகே பள்ளி மாணவியர் விடுதி செல்வதற்கான பாதை உள்ளது.காம்பவுண்ட் சுவரின் மற்ற பகுதிகளும் சேதமடைந்த நிலையில் உள்ளதால் இவ்வழியே செல்லும் மாணவிகளுக்கு விபத்து அபாயம் உள்ளது. பள்ளிக்கூடம் செல்லக்கூடிய சாலையின் வழியாக செல்லும் போது குடிமகன்கள் மற்றும் வெளி நபர்களால் பொருள்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளது.
எனவே மாவட்ட கல்வி நிர்வாகம் உரிய நிதி ஒதுக்கீடு செய்து மாணவிகளின் நலன் கருதி பாதுகாப்பான காம்பவுண்ட் சுவர் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

0 Comments