தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை...... விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறாது...... நெல்லையில் ஜான் பாண்டியன் பேட்டி.....

 





திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தென் மண்டல தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் நிறுவனத் தலைவர் பெ. ஜான் பாண்டியன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அவர், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து பல்வேறு அதிரடியான கருத்துகளை முன்வைத்தார்.

கண்மணி மாவீரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், ஜான் பாண்டியன் மற்றும் மயோபதி மருத்துவர் ராமசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். 

*   4 கல்லூரி மாணவிகளுக்கு ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் கல்வி உதவித்தொகை.

*   25 பெண்களுக்குத் தையல் இயந்திரங்கள்.

*   சலவை தொழிலாளர்களுக்கு இஸ்திரி பெட்டிகள்.

*   விவசாயிகளுக்கு மருந்தடிக்கும் இயந்திரங்கள்.

*   200 நபர்களுக்கு அரிசி, பருப்பு, வேஷ்டி மற்றும் சேலைகள் என மொத்தம் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜான் பாண்டியன், "தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. அதன் பின்னரே கூட்டணி குறித்து இறுதி முடிவு அறிவிக்கப்படும். தமிழகத்தைப் பொறுத்தவரை போட்டி என்பது அ.தி.மு.க மற்றும் தி.மு.க ஆகிய இரு கட்சிகளிடையேதான். மூன்றாவது, நான்காவது அணிகள் போட்டிக்கு வர வாய்ப்பில்லை. 

நடிகர் விஜய்க்கு கூட்டத்தைப் பார்ப்பதை வைத்து ஒரு முடிவுக்கு வர முடியாது. அவருக்குக் கூடும் கூட்டம் ஓட்டாக மாறாது. தேர்தல் அறிக்கையில் ஏழைகளுக்கு வீடு வழங்கப்படும் என்பது போன்ற வாக்குறுதிகளை யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம், ஆனால் அவற்றை நிறைவேற்றுவது கடினம். அவர் தேர்தலைச் சந்திக்கட்டும், அப்புறம் பார்க்கலாம்" என்று விமர்சித்தார். மேலும், பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் பொது மேடைக்கு அழைப்பு வந்தால் நிச்சயம் செல்வேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், "தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையே நிலவுகிறது. பெண்களை அவர்களாகவே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலையில் அரசு அவர்களை விட்டுள்ளது. கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் புழக்கத்தால் கொலை, கொள்ளைகள் அதிகரித்து வருகின்றன. காவல்துறையினர் இங்குள்ள சில்லறை விற்பனையாளர்களை மட்டுமே கைது செய்கின்றனர். ஆனால் கஞ்சாவின் ஆணிவேராக விளங்கும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பெரும் புள்ளிகளைக் கைது செய்யத் தவறிவிட்டனர்" என்று சாடினார்.

பள்ளி மாணவர்கள் மது அருந்துவது குறித்துப் பேசிய அவர், "அனைத்து விஷயங்களுக்கும் அரசை மட்டுமே குற்றம் சொல்வது சரியல்ல. தங்கள் குழந்தைகள் மது மற்றும் போதைக்கு அடிமையாகாமல் வளர்ப்பது பெற்றோரின் முதன்மையான கடமை. இதில் பள்ளி ஆசிரியர்களுக்கும் பெரும் பங்கு உண்டு" என்றார்.

தொடர்ந்து, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனிமவளக் கொள்ளை அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதைத் தடுக்க அந்தப் பகுதி மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வீதிக்கு வந்து போராட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.

இந்த விழாவில் தங்கராஜ் பாண்டியன், மணிமாறன், மணிகண்டன், கண்மணி ஷர்மிளா, சண்முகராஜ், பாலா சிவகுமார், சின்னத்துரை, செல்வராஜ், தமிழர் சட்ட இயக்க தலைவர் பார்த்திபன் உட்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.



Post a Comment

0 Comments