அதிக கொள்ளளவு கொண்ட மிக நீளமான கன்டெய்னர் கப்பலை கையாண்டு வரலாறு படைத்தது தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம்

 


வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம் (VOC Port Authority), தூத்துக்குடி, இந்திய கடல்சார் துறையில் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. 304 மீட்டர் நீளமும், 40 மீட்டர் அகலமும் கொண்ட எம்.வி. எம்.எஸ்.சி. மைக்கேலா (M.V. MSC Michaela) என்ற மிக நீளமான மற்றும் அதிக கன்டெய்னர் கொள்ளளவு கொண்ட கப்பல், டிசம்பர் 21, 2025 அன்று தக்ஷின் பாரத் கேட்வே கன்டெய்னர் முனையத்தில் வெற்றிகரமாக நங்கூரமிட்டது.

இந்தக் கப்பல், 6,724 TEUs கன்டெய்னர் கொள்ளளவுடன், இதுவரை வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் நங்கூரமிட்ட மிகப் பெரிய கன்டெய்னர் கப்பலாகப் பதிவாகியுள்ளது. இதன் மூலம், இந்தியாவின் கடல்சார் துறையில் வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தின் முக்கியத்துவம் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு மே மாதத்தில் 299.5 மீட்டர் நீளமுள்ள எம்.வி. எம்.எஸ்.சி. பெட்ரா கப்பலை கையாண்ட நிலையிலிருந்து, தற்போது 304 மீட்டர் நீளமுள்ள எம்.வி. எம்.எஸ்.சி. மைக்கேலா கப்பலை கையாளும் நிலைக்கு துறைமுகம் முன்னேறியிருப்பது, துறைமுகத்தின் செயல்பாட்டு திறனில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது.

பனாமா நாட்டின் கோலன் துறைமுகத்திலிருந்து தூத்துக்குடிக்கு வந்த இந்தக் கப்பல், அடுத்ததாக இலங்கையின் கொழும்பு துறைமுகத்திற்கு புறப்பட உள்ளது. இக்கப்பல் மூலம் மொத்தம் 3,977 TEUs கன்டெய்னர்கள் கையாளப்படுகின்றன. இதில்,

2,676 TEUs இறக்குமதி கன்டெய்னர்கள்,

1,104 TEUs ஏற்றுமதி கன்டெய்னர்கள்,

148 TEUs மறுஅமைப்பு (Restow) பணிகளுக்கான கன்டெய்னர்கள்,

49 TEUs மாற்று துறைமுக (Transshipment) கன்டெய்னர்கள் ஆகும்.

நடப்பு 2025–26 நிதியாண்டில் (நவம்பர் 2025 வரை), வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 5,62,928 TEUs கன்டெய்னர்களை கையாள்ந்துள்ளது. இது, முந்தைய 2024–25 நிதியாண்டின் அதே காலகட்டத்தில் கையாளப்பட்ட 5,20,919 TEUs கன்டெய்னர்களுடன் ஒப்பிடுகையில், 8.06 சதவீத வளர்ச்சியாகும்.

இந்நிகழ்வை ஒட்டி நடைபெற்ற நினைவு நிகழ்ச்சியில், வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தின் தலைவர் திரு சுஷாந்த் குமார் புரோஹித் (IRSEE) பேசுகையில்,அதிகபட்ச ஆழத்தை 14.20 மீட்டராக உயர்த்துதல்,துறைமுகத் திருப்புமுனை வட்டாரத்தை 488 மீட்டரிலிருந்து 550 மீட்டராக விரிவாக்குதல்,DPE வசதியின் செயல்படுத்தல்,மற்றும் பெரிய கன்டெய்னர் கப்பல்களை இயக்க உதவும் 60 டன் போலார் புல் திறன் கொண்ட 4-ஆவது டக் கப்பல் சேர்க்கை போன்ற கட்டமைப்பு மேம்பாடுகளின் விளைவாகவே இத்தகைய பெரும் கப்பலை வெற்றிகரமாக கையாள முடிந்தது என தெரிவித்தார்.

மேலும், விரைவில் செயல்படுத்தப்பட உள்ள வெளிப்புற துறைமுகத் திட்டம் (Outer Harbour Project), தென் இந்தியாவின் முக்கிய கடல் நுழைவாயிலாக வி.ஒ. சிதம்பரனார் துறைமுகத்தை மேலும் வலுப்படுத்தும் என அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில்,துணைத் தலைவர் திரு ராஜேஷ் சௌந்தரராஜன், ஐ.ஏ.எஸ்,முதன்மை கண்காணிப்பு அலுவலர் திரு பி. கவின் மகாராஜ்,சுங்கத் துறை ஆணையர் திரு விகாஸ் நாயர்,கப்பல் கப்டன் திரு வுஜ்னோவிக் ட்ரிபோ,DBGCT கன்டெய்னர் முனையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு செந்தில் குமார்,MSC ஏஜென்சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மூத்த பொது மேலாளர் திரு பென்னி ஜார்ஜ்,மற்றும் துறைமுக அதிகாரிகள், வர்த்தக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments