தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தூத்துக்குடி மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் அஜிதா அக்னல், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் கட்சி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தவெக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் அறிவிக்கப்பட்டபோது, தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலாளர் பதவி தனக்குக் கிடைக்கும் என்று அஜிதா பெரிதும் எதிர்பார்த்திருந்தார்.ஆனால், அப்பதவி சாமுவேல் என்பவருக்கு வழங்கப்பட்டதால் அதிருப்தியடைந்த அவர், சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகம் முன்பு தனது ஆதரவாளர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது கட்சித் தலைவர் விஜய்யின் காரை மறித்து முறையிட முயன்ற அவரை, நிர்வாகிகள் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.தலைமை அலுவலகத்தில் தகுந்த பதில் கிடைக்காததாலும், பல ஆண்டுகளாகக் கட்சிக்காக உழைத்தும் தன்னை ஓரங்கட்டியதாலும் கடந்த சில நாட்களாக அவர் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று இரவு தூக்கமின்மைக்காகத் தான் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.சுயநினைவற்ற நிலையில் இருந்த அவரை மீட்ட உறவினர்கள், உடனடியாகத் தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இச்சம்பவம் குறித்துத் தூத்துக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0 Comments