தமிழகத்தில் நடைபெற்று வரும் திமுக தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்துவிட்டதாகவும், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மக்களின் முதல்வராகப் பொறுப்பேற்பார் என்றும் பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், தமிழக அரசியல் சூழல் மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்துப் பேசியதாவது:
சமீபத்தில் புதுக்கோட்டையில் நடைபெற்ற பாஜகவின் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தார். அவரது வருகை தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 2026 ஏப்ரலில் நடைபெறும் தேர்தலில் தமிழகத்தில் மிகப்பெரிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ஆட்சி அமைக்கும்.
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்காகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால், திமுக அரசு இதுவரை அரசாணை (G.O) கூட வெளியிடாமல் அவர்களை ஏமாற்றி வருகிறது. ஜூன் மாதம் முதல் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என அரசு ஒரு கண்துடைப்பு வாக்குறுதியை அளித்துள்ளது. ஆனால், ஜூன் மாதம் தமிழகத்தில் மக்களின் முதல்வராக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தான் இருப்பார். அப்போது அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்துப் பேசித் தீர்வு காணப் படும். திமுகவின் ஜூன் மாத அறிவிப்பு என்பது "குதிரைக்குக் கொள்ளு காட்டி ஏமாற்றுவது" போன்ற ஒரு செயலாகும்.
திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் 100 நாள் வேலைத் திட்டத்தை மத்திய அரசு முடக்கிவிட்டதாகப் பொய் கூறுகின்றனர். ஆனால், பிரதமர் மோடி இந்தத் திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தித் தந்துள்ளார். மேலும், கூலி வழங்குவதில் இருந்த முறைகேடுகளைத் தவிர்க்க வங்கிக் கணக்கில் நேரடியாகப் பணம் செலுத்தும் முறை மற்றும் கைரேகை (Biometric) முறையை அமல்படுத்தியுள்ளார். முன்பெல்லாம் வேலைக்கே போகாமல் திமுகவினர் சம்பளம் வாங்கும் ஓட்டைகள் இருந்தன, தற்போது அவை அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.
நெல்லை உள்ளிட்ட இடங்களில் விளக்கேற்றும் விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பை அரசு சரியாக அமல்படுத்தவில்லை. 10 பேர் சென்று விளக்கேற்ற நீதிமன்றம் அனுமதி அளித்தும், அதனை மதக் கலவரம் வரும் என்று கூறி அரசு தடுத்தது. ஒரு அரசே மதக் கலவரம் வரும் என்று சொன்னால், அந்த அரசு கலவரத்தைத் தூண்டுகிறது என்று தான் அர்த்தம். இந்த விவகாரத்தில் அரசியல் செய்யக்கூடாது என நீதிமன்றமே அரசுக்குக் குட்டு வைத்துள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிப்பது சந்தேகமே. மந்திரி சபையில் பங்கு கேட்பது உள்ளிட்ட உள்கட்சி மோதல்களால் அந்தக் கூட்டணி உடைய வாய்ப்புள்ளது. டிகேஎஸ் இளங்கோவன் போன்றவர்கள் காங்கிரஸ் கட்சிப் பிரச்சனையில் தலையிடுவது முறையற்றது. பாஜக - அதிமுக கூட்டணி குறித்துக் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், பீகாரில் பாஜக அதிக இடங்களில் வென்றாலும் நிதீஷ் குமாரை முதல்வராக ஏற்றுக்கொண்டதை உதாரணமாகக் கூறினார். இதில் எங்களுக்கு எந்தக் குழப்பமும் இல்லை.
தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 4.5 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது. இதற்கான பட்டியலை ஆளுநரிடம் அளித்துள்ளோம். கல்வி, சுகாதாரத் துறை என அனைத்திலும் ஊழல் மலிந்துவிட்டது. ராதாபுரம் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளிலிருந்து கனிம வளங்கள் கேரளாவுக்குக் கடத்தப்படுகின்றன. ஆனால், கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு மருத்துவக் கழிவுகள் மட்டுமே வருகின்றன.
திமுக என்பது ஒரு குடும்ப ஆட்சியாக மாறிவிட்டது. உதயநிதி ஸ்டாலினை எப்படியாவது முதல்வராக்க வேண்டும் என்பதில் மட்டுமே அரசு குறியாக உள்ளது. தேர்தல் தோல்வி பயத்தாலேயே கடந்த முறை பொங்கல் தொகுப்பு வழங்காத திமுக அரசு, தற்போது ₹3000 வழங்குகிறது. செந்தில் பாலாஜி விவகாரத்தில் தனக்கு எந்த தனிப்பட்ட கால்ப்புணர்ச்சியும் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.

0 Comments