நாகை அருகே தொடர் வாகனத் திருட்டில் ஈடுபட்டவர் கைது...... ரூ.7.50 லட்சம் மதிப்புள்ள 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்......



நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் தலைமையிலான போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், இசிஆர் சாலையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த ஒரு இருசக்கர வாகனத்தை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். வாகனத்தை ஓட்டி வந்த நபர் முன்னுக்குப் பின் முரணான பதில்கள் அளித்ததோடு, போலீசாரிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, தனிப்படை போலீசார் உதவி ஆய்வாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் அந்த நபரை மடக்கிப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் தொடர் வாகனத் திருட்டுகளில் ஈடுபட்டு வரும் வைத்தியநாதன் மகன் ராஜ்குமார் என்பதும், இதுவரை பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் 98 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட ராஜ்குமாரிடம் இருந்து சுமார் ரூ.7.50 லட்சம் மதிப்புள்ள 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இந்த திருட்டு வழக்கை திறம்பட விசாரித்து குற்றவாளியை கைது செய்த கீழையூர் காவல் நிலைய ஆய்வாளர் செங்குட்டுவன், தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் ஜெயச்சந்திரன் தலைமையிலான  காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.எஸ். பாலகிருஷ்ணன் பாராட்டினார்.

திருக்குவளை நிருபர் த.கண்ணன் 

Post a Comment

0 Comments