தமிழக அரசியல் களம் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி நகர்ந்து வரும் சூழலில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர்களாகக் கருதப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் ஆர். வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ குன்னம் ராமச்சந்திரன் ஆகியோர் இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் (திமுக) இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, இவர்கள் மூவரும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப்போவதாக அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்ட நிலையில், தற்போது அந்த முடிவை மாற்றிக்கொண்டு ஆளுங்கட்சியான திமுகவை நோக்கித் தங்கள் பார்வையைத் திருப்பியுள்ளனர்.இன்று காலை 10:30 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இந்த இணைப்பு விழா நடைபெற வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. வைத்திலிங்கம் உள்ளிட்ட முக்கியத் தளபதிகள் வெளியேறுவதால் ஓபிஎஸ்-ஸின் கூடாரம் காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளதுடன், அடுத்தகட்டமாக ஓ. பன்னீர்செல்வமும் திமுகவை ஆதரிக்கும் முடிவை எடுப்பாரா என்ற விவாதம் தற்போதே தமிழக அரசியலில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

0 Comments