சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள இளையாத்தங்குடி கிராமத்தில் கைலாசநாதர் நித்திய கல்யாணி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த கோவிலாகும் அக்காலம் தொட்டு மார்கழி மாத கடைசி வாரத்தில் ஆருத்ரா தரிசன தேரோட்டம் நடைபெறுவது வழக்கமாகும். இந்த ஆண்டு கடந்த 25 ஆம் தேதி வியாழக்கிழமை மாணிக்கவாசகர் நடராஜ பெருமானுக்கு காப்பு கட்டுகளுடன் கடந்த வாரம் இவ்விழாவானது தொடங்கியது.
மறுநாள் காலை குதிரை வாகன புறப்பாடும் அன்று மாலை பஞ்ச மூர்த்தி சுவாமிகள் திருவீதி உலாவும் நடைபெற்றது. இன்று காலை நடராஜப்பெருமாள்,சிவகாமி அம்பாள் மற்றும் மாணிக்கவாசருக்கு ஆருத்ரா சிறப்பு அபிஷேக தீப ஆராதனையும் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடராஜர் தேரிலும் சிவகாமி அம்மாள் சுந்தரர் சப்பரத்திலும் எழுந்தருளினர். அதன் பின் பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக தேரை வடம் பிடித்து இழுத்து ஆருத்ரா தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
இவ்விழாவில் பங்கேற்பதற்காக சுற்றுவட்டார 25 கிராமங்களில் இருந்து நாட்டார் நகரத்தார்கள் கிராமத்தார்கள் என திரளானோர் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு 38 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோவிலில் கைலாசநாதர் சுவாமிக்கும் நித்திய கல்யாணி அம்மனுக்கும் திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments