அவசர ஆம்புலன்ஸ்க்கு வழி கிடைக்காத ஒரே இடமாக இரயில்வே கேட் உள்ளது. எனவே இரயில் சென்றவுடனேயே சிவப்பு விளக்கு சிக்னல் நிற்கும் வரை காத்திருக்காமல் உடனடியாக கேட் திறக்க இரயில்வே நிர்வாகமும், மத்திய அரசும் உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் முன்னாள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கட்டுமாவடி ராஜா கூறியதாவது:
கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உயிருக்கு போராடிய பெண்மணியை இருசக்கர வாகனத்தில் அழைத்து வரும்பொழுது இராமேஸ்வரம் - தாம்பரம் விரைவு இரயிலுக்காக கேட் பூட்டப்பட்டிருந்தது. கேட்டை திறக்க சொல்லி உயிருக்கு போராடிய பெண்ணின் உறவினர்கள் சண்டையிட்டும், மிரட்டியும் உள்ளனர். இறுதியாக கேட்கீப்பர் தன்னுடைய டூவீலரை கொடுத்து உதவி செய்து அவர்களை சமாளித்துள்ளார். இது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே அடிக்கடி நடந்து வருகிறது. குறிப்பாக அவசரமாக ஆம்புலன்ஸ் வரும்பொழுது கேட் திறக்கப்படாததால் மிகப்பெரிய அளவில் வாக்குவாதமும், சண்டையும் நடைபெறுவது வாடிக்கையாக இருக்கிறது.
"கடந்த ஆண்டு 2025ல் அம்மாபட்டினத்தில் நான் ஆம்புலன்ஸ் ஓட்டும் பொழுது இது போன்ற சம்பவங்கள் நிறைய நடந்துள்ளது.
அவசர நோயாளிகளை ஆம்புலன்சில் நான் அழைத்துச் செல்லும் பொழுது புதுக்கோட்டை செல்லும் வழியில் அறந்தாங்கியில் கட்டுமாவடி சாலையில் உள்ள இரயில்வே கேட்டிலும், திருச்சி செல்லும் பொழுது புதுக்கோட்டை நகரின் திருச்சி பைபாஸ் அருகே கருவேப்பிலான் இரயில்வே கேட்டிலும், காரைக்குடி நகரில் அழகப்பா கல்லூரி அருகில் உள்ள இரயில்வே கேட்டிலும், மயிலாடுதுறை செல்லும் வழியில் நீடாமங்கலம் இரயில்வே கேட்டிலும் சிக்கிக் கொண்டோம். இரயில்வே கேட்டில் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டதும் ஆம்புலன்சில் உள்ள நோயாளியின் நிலைமையை பார்த்த அருகில் இருந்த வாகன ஓட்டிகள் இரயில்வே கேட் கீப்பரிடம் கடுமையான வாக்குவாதத்திலும், சண்டையிலும் ஈடுபட்டனர். உடனே ஒரு சில கேட் கீப்பர்கள் என்னிடம் சில நிமிடங்கள் மட்டும் காத்திருங்கள். விரைவில் இரயில் வந்துவிடும். சிவப்பு விளக்கு சிக்னல் நின்றவுடன் உடனே சென்று விடலாம் என்று கெஞ்சினார்கள். நானும் உடனே கேட்கீப்பரிடம் சண்டையிட்ட அருகில் இருந்த வாகன ஓட்டிகளிடம் சமாதானம் செய்து, நோயாளியின் உறவினர்களிடமும் இரயில் சென்ற பிறகுதான் செல்லலாம் என்று புரிய வைத்தேன். இருப்பினும் இரயில் சென்ற இரண்டு அல்லது மூன்று நிமிடம் கழித்து தான் கேட் திறக்க முடிகிறது. இரயில் சென்ற பிறகு சிவப்பு விளக்கு சிக்னல்கள் நிற்பதற்கு இரண்டு நிமிடமாகிறது. அதற்குப் பிறகு தான் இரயில்வே கேட் திறக்க முடிகிறது. இந்த காலதாமதத்திற்கும் வாகன ஓட்டிகள், கேட் கீப்பரிடம் கடுமையாக சண்டை சச்சரவு செய்கிறார்கள். இது போன்ற சூழலில் கேட் கீப்பர்கள் செய்வதறியாது தவிக்கிறார்கள். எவ்வளவுதான் அறிவியல் வளர்ச்சி அடைந்தாலும் இரயில் சென்ற பிறகும் கேட் திறக்க மூன்று நிமிடம் தாமதம் ஆகிறது. ஆனால் கிராமப்புறங்களில் உள்ள இரயில்வே கேட்டுக்களில் இரயில் சென்ற உடனே திறந்து விடுகிறார்கள். அங்கு சிவப்பு விளக்கு சிக்னல் நிற்கும் வரை காத்திருப்பது இல்லை. நகர்ப்புற பகுதிகளில் மட்டுமே இந்த சிவப்பு விளக்கு சிக்னல் நிற்கும் வரை காத்திருக்கும் நிலைமை ஏற்படுகிறது. எனவே மத்திய அரசும், இரயில்வே நிர்வாகமும் இதில் தலையிட்டு இரயில் சென்ற உடனேயே கேட் திறக்க கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் செல்ல வழி கிடைக்கும்.
டிராபிக் சிக்னல்கள், சுங்கச்சாவடி (டோல்கேட்), பொதுக்கூட்டங்கள், மறியல் போராட்டங்கள், ஊர்வலங்கள், ஆன்மீக விழாக்கள் இன்னும் பல போக்குவரத்துக்கள் செல்ல முடியாத இடங்களில் கூட ஆம்புலன்ஸுக்கு உடனடியாக வழி கிடைக்கிறது. ஆம்புலன்ஸ்க்கு வழி விடாத ஒரே இடம் இரயில்வே கேட் மட்டுமே. திருச்சியில் உள்ள எத்தனையோ டிராபிக் சிக்னல்களில் ஆம்புலன்ஸ் சத்தம் கேட்ட உடனேயே அங்குள்ள டிராபிக் போலீசார் ஒலிபெருக்கியில் ஆம்புலன்ஸ் வருகிறது வழி விடுங்கள் என்று கூறி ஒரு நொடி கூட தாமதிக்காமல் உடனடியாக ஆம்புலன்ஸ் கடந்து செல்ல வழி ஏற்படுத்துகிறார்கள். ஆனால் அவசர ஆம்புலன்ஸ்க்கு வழி விடாத ஒரே இடம் இரயில்வே கேட் மட்டுமே. எனவே மத்திய அரசும், இரயில்வே நிர்வாகமும் உடனடியாக இதில் தலையிட்டு இரயில் சென்ற உடனேயே கேட் திறக்க கூடிய நிலைமையை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் கேட் கீப்பராக பணிபுரியக்கூடியவர்களுக்கும் மன நிம்மதியை ஏற்படுத்தும்" என்று கூறினார்.

0 Comments