சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டார பகுதிகளில் மஞ்சுவிரட்டுக்கு என்று தனி முக்கியத்தவம் உண்டு. இந்த பகுதியில் காளைகள் வளர்ப்போர் அதிகமாக உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் தென் தமிழகத்தில் முதல் மஞ்சுவிரட்டாக வெள்ளிக்கிழமை மு.சூரக்கடி கிராமத்தில் பிரமாண்டமான முறையில் இளவட்ட மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டின் முதல் மஞ்சுவிரட்டு செகுட்டையனார் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மு.சூரக்குடியில் இளவட்ட மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
அதன்படி மு.சூரக்குடி கிராம மையப்பகுதியில் அமைந்துள்ள மைதானத்தின் முன்பு உள்ள தொழுவத்தில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தேனி மற்றும் சிங்கம்புணரி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 100க்கும் மேற்பட்ட காளைகள் தொழுவத்தில் அடைக்கப்பட்டன.
மு.சூரக்குடி மந்தையில் இருந்து கிராமத்தினர் இளைஞர்கள் ஒன்றிணைந்து காளைகளுக்கு ஜவுளி எடுத்து வந்தனர்.பின்னர் காேவில் காளைகளுக்கு முதல் மரியாதை செய்யப்பட்டது.தொடர்ந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்ந்து விடப்பட்டன.
தொடர்ந்து வாடிவாசல் வழியாக ஒன்றன் பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. மைதானத்தில் சீறிப்பாய்ந்து வரும் காளைகளை இளம் காளையர்கள் காளைகளுக்கு போக்கு காட்டி அடக்கினர். ஒரு சில காளைகள் பிடிபட்டன பல காளைகள் பிடிபடாமல் போக்குகாட்டி சென்றன. மேலும் ஆங்காங்கே வாகனங்களில் கொண்டு வரப்பட்ட 300க்கும் மேற்பட்ட காளைகள் ஆங்காங்கே கட்டுமாடுகளாக அவிழ்த்து விட்டதில் மாடுபிடி வீரர்கள் பார்வையாளர்கள் முட்டி தள்ளியது.
இதில் காளைகள் முட்டியதில் 25 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மு.சூரக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இதில் 3 பேர் மேல்சிகிச்சைக்கு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆண்டின் முதல் மஞ்சுவிரட்டு என்பதால் போட்டியைகாண பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மஞ்சுவிரட்டு ரசிகர்கள் பொதுமக்கள் மஞ்சுவிரட்டை கண்டு ரசித்தனர்.

0 Comments