திருக்குவளை அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி


நாகை மாவட்டத்தில் இந்த ஆண்டிற்கான சம்பா  நெல் அறுவடை பணிகள் துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக மகசூல் பாதிப்பு ஏற்பட்ட போதிலும், மழையிலிருந்து தப்பிய நெற்பயிர்களை விவசாயிகள் பாதுகாத்து அறுவடைக்கு கொண்டு வந்துள்ளனர்.இந்நிலையில், விவசாயிகளிடமிருந்து நெல்லை நேரடியாக கொள்முதல் செய்யும் வகையில்,நாகை மாவட்டத்தில் வலிவலம் மற்றும் கயத்தூர் பகுதிகளில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. மேலும் விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப அந்த பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க ஏதுவாக தயார் நிலையில் உள்ளது. 

திருக்குவளை அடுத்த வலிவலம் பகுதியில் திறக்கப்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ள நிலையில்,இந்த நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 40 கிலோ எடை கொண்ட 1000 மூட்டைகள் வீதம் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.இதனிடையே,நெல் அறுவடை செய்த விவசாயிகள், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான பணத்தை விரைவாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து நெல் விவசாயி விஜயா கூறியதாவது:"நாங்கள் கடுமையான உழைப்புடன் நெல் சாகுபடி செய்து, மழை மற்றும் பனிப்பொழிவு போன்ற இயற்கை பாதிப்புகளை எதிர்கொண்டு அறுவடை செய்து வருகிறோம்.அறுவடை செய்த நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளோம்.இந்த கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.இருப்பினும், முந்தைய பயிர் சேதத்திற்கான நிவாரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.

மேலும், இயந்திர அறுவடை, போக்குவரத்து மற்றும் கூலித் தொழிலாளர்களுக்கான செலவுகளை உடனடியாக செலுத்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்.விவசாயம் முழுவதும் கடன் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதால்,நெல்லுக்கான கொள்முதல் தொகையை விரைவாக வழங்கினால் மட்டுமே கடன்களை அடைக்க முடியும்.அரசு கொள்முதல் நிலையத்தில் முழு ஆதார விலை கிடைப்பது விவசாயிகளுக்கு பெரிய நம்பிக்கையாக உள்ளது.எனவே, நெல்லுக்கான பணத்தை தாமதமின்றி வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

திருக்குவளை நிருபர் த.கண்ணன்

Post a Comment

0 Comments