என் வழி தனி வழி என கையில் பச்சை குத்திய நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் இடம் பெற்ற தமிழன்

 


இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணியில், வேலூர் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட 23 வயது சுழற்பந்து வீச்சாளர் ஆதித்யா அசோக் இடம்பெற்றுள்ளது தமிழக ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூரில் பிறந்த ஆதித்யாவுக்கு நான்கு வயதாக இருக்கும்போதே அவரது குடும்பம் நியூசிலாந்திற்கு இடம்பெயர்ந்த நிலையில், அங்குள்ள உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி தற்போது தேசிய அணியில் இடம்பிடித்துள்ளார்.

தீவிர ரஜினிகாந்த் ரசிகரான இவர், தனது பந்துவீசும் கையில் ‘என் வழி தனி வழி’ என்ற புகழ்பெற்ற வசனத்தைத் தமிழில் பச்சை குத்தியுள்ளார். ஜனவரி 11-ஆம் தேதி வதோதராவில் தொடங்கவுள்ள 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில், கோலி மற்றும் ரோஹித் போன்ற ஜாம்பவான்களுக்கு எதிராகப் பந்துவீச ஆவலாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். தனது பூர்வீக மண்ணிலேயே சர்வதேசப் போட்டியில் விளையாட ஆதித்யாவுக்குக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பு, ஒரு வேலூர் இளைஞரின் உலகளாவிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments