சிவகங்கை: கரும்பு ஆலையில் மொலாசஸ் திரவம் சேமிப்பு தொட்டியில் தவறி விழுந்து இரண்டு தொழிலாளர்கள் பலி




சிவகங்கை மாவட்டம், படமாத்தூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் கரும்பு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 21ஆம் தேதி கரும்பு அரைக்கும் பணி தொடங்கிய நிலையில், கரும்பிலிருந்து சர்க்கரை தயாரிக்கும் போது உபரியாக கிடைக்கும் மொளாசஸ் திரவம் சேமித்து மதுபான ஆலைகளுக்கு அனுப்பப்படுவது வழக்கம். இந்நிலையில் மொலாசஸ் திரவம் சேமிப்பு தொட்டியில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரு தொழிலாளர்கள்  எதிர்பாராத விதமாக தவறி விழுந்தாக கூறப்படுகிறது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அதற்கு முன்பாகவே, ஆலை நிர்வாகத்தினர்  தொட்டியில் சிக்கியிருந்த இருவரின் உடல்களையும் மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த தொழிலாளர்கள், சிவகங்கை அருகே உள்ள கரும்பாவூர் பகுதியைச் சேர்ந்த மோகனசுந்தரம் (35) மற்றும் சிவகங்கை, மதுரை மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த பொன்னழகு (59) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக திருப்பாச்சேத்தி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக ஆலையில் பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா, பராமரிப்பு பணியின் போது தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டதா என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே, தொழிலாளர்களின் பாதுகாப்பில் அலட்சியம் காட்டப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டும்  பொதுமக்கள், சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி, பொறுப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments