சிவகங்கை மாவட்டத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு, வடமாடு மற்றும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகள், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி நடத்தப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, இ.ஆ.ப., தெரிவித்தார்.
இதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று (6.1.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், ஜனவரி முதல் மே 2026 வரை நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அரசு விதிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
ஜல்லிக்கட்டு நடத்த 30 நாட்களுக்கு முன்பாக www.jallikattu.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பித்து, ரூ.50 உறுதிமொழி முத்திரைத்தாள், ரூ.1 கோடி காப்பீடு, முந்தைய ஆண்டின் அரசாணை, தளப் புலப்படம், CCTV புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். அரசிதழில் பதிவு செய்யப்பட்ட கிராமங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
விழா தொடங்குவதற்கு முன் 24 மணி நேரத்திற்குள் அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டால் மட்டுமே இறுதி அனுமதி வழங்கப்படும். காளைகள் கால்நடை மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டிருக்க வேண்டும்; வீரர்கள் மற்றும் காளைகள் விவரங்கள் முன்பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். காளைகளுக்கு ஊக்க மருந்துகள், எரிச்சல் தரும் பொருட்கள் பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சிகள் திறந்த வெளியில் நடத்தப்பட வேண்டும்; காளை சேகரிப்பு மையங்களில் நிழற்குடை, கண்காணிப்பு கேமராக்கள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். ஒரே நாளில் பல விண்ணப்பங்கள் வந்தால், முதலில் வந்த விண்ணப்பத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி, இந்த ஆண்டும் சிவகங்கை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு, வடமாடு, மஞ்சுவிரட்டு விழாக்களை சிறப்பாக நடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

0 Comments