இந்தியாவிடம் இருந்து 45 ஆயிரம் டன் டீசல் இறக்குமதி செய்யும் வங்காளதேசம்

 


ஈரான் மோதலால் உலகம் முழுவதும் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு, பெட்ரோல், டீசல் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்தியாவிடம் இருந்து 45 ஆயிரம் டன் டீசல் இறக்குமதி செய்ய வங்காளதேசம் முடிவு செய்துள்ளது.

இதுபற்றி வங்காளதேசத்தின் பெட்ரோலியம் கார்ப்பரேசனின் பொது மேலாளர் முகமது முர்ஷித் உசைன் ஆசாத் இன்று கூறும்போது, இந்தியாவிடம் இருந்து கூடுதலாக 45 ஆயிரம் டன் டீசல் இறக்குமதி செய்ய வங்காளதேசம் முடிவு செய்துள்ளது. அதனை செயல்படுத்துவதற்கான பணிகள் நிறைவடைந்ததும் ஏப்ரலுக்குள், மொத்தம் 45 ஆயிரம் டன் டீசல் எங்கள் நாட்டை வந்தடையும் என்றார்.இதன்படி, சமீபத்தில் 5 ஆயிரம் டன் டீசல் இந்தியாவிடம் இருந்து வந்து சேர்ந்தது. அடுத்த 5 ஆயிரம் டன் டீசல் மார்ச் 18 அல்லது 19-ந்தேதியில் வந்து சேரும் என கூறினார்.

இதற்கு முன்பு இந்தியாவிடம் இருந்து ரெயில் பெட்டிகளின் வழியே டீசல் இறக்குமதி நடந்தது. தற்போது, இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவின் அடிப்படையில் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. 2023-ம் ஆண்டு மார்ச்சில் அப்போது வங்காளதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா மற்றும் பிரதமர் மோடி இருவரும் இந்த குழாய் வழியேயான இணைப்பை தொடங்கி வைத்தனர்.

எனினும் முகமது யூனுஸ் தலைமையிலான வங்காளதேச இடைக்கால அரசு இந்த டீசல் இறக்குமதியை நிறுத்தி வைத்தது. சமீபத்திய தேர்தலில் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் பொறுப்பேற்று கொண்ட பின்னர், கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியாவிடம் இருந்து 5 ஆயிரம் டன் டீசல், இந்த குழாய் இணைப்பின் வழியே மீண்டும் சென்று சேர்ந்தது.

Post a Comment

0 Comments