இந்தியா பிரைட் புக்ஸ் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் என்பது தனிநபர்கள் மற்றும் அமைப்புகளின் சிறந்த சாதனைகளை அங்கீகரித்து கொண்டாடுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தளமாகும். பல்வேறு துறைகளில் முதல் முறையாகவும் உயர்மட்டத்திலும் மனித சாதனைகளை ஆவணப்படுத்துவதன் மூலம் சிறப்பை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்திய பெருமை சாதனை புத்தகங்களின் முக்கிய அம்சமானது சிறந்து விளங்கும் மக்களை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துகிறது, குறிப்பிடத்தக்க பதிவுகளை ஆவணப்படுத்துகிறது.இந்தியாவின் பெருமையினை சர்வதேச அளவில் பதிவு செய்கிறது.இந்தியா பிரைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் உலக சாதனையாளர்கள், கலாச்சார மைல்கற்கள் மற்றும் படைப்பு சாதனைகளை உள்ளடக்கிய பதிவுகளை ஆவணப்படுத்துகிறது, சரிபார்க்கிறது மற்றும் வெளியிடுகிறது.
அவ்வகையில் தமிழ்நாடு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மயான பூமியில் மனைவி மகளுடன் உரிமை கோரப்படாத ஆதரவற்ற அனாதை பிணங்களை உரிய மரியாதையுடன் இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்து வருகிறார் யோகா ஆசிரியர் விஜயகுமார்.யோகா ஆசிரியர் விஜயகுமார் ஆதரவற்ற அனாதை பிணங்களை குடும்ப சகிதமாக தன்னலமற்ற மனித நேயப்பணியினை இந்தியா பிரைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் அங்கீகாரம் அளித்து அப்பணியினைப் பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளது.
இந்தியா பிரைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் இந்திய தென்மண்டல முதன்மை நடுவர் சக்திவேல் ஆதரவற்ற அனாதை பிணங்களை மயான பூமியில் மனைவி மகளுடன் குடும்பம் சகிதமாக உரிமை கோரப்படாத உடலுக்கு உரிய மரியாதையுடன் கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்யும் மனிதநேயப் பணியினை அங்கீகாரம் செய்துள்ளது என பதக்கத்தை அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
இது குறித்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில்,ஆதரவற்றவர்களாக இருப்பவர்கள் காக்கப்பட வேண்டியவர்களால் கைவிடப்பட்டுள்ளவர்கள் ஆவார்கள். கைவிடப்பட்ட நபர்கள் தீராத தொற்று வியாதினாலோ, மது அடிமையினாலோ,கடன் பிரச்சினைகளாலோ, மனநலம் பாதித்த நிலையிலோ , குடும்ப சூழலாலோ ஏதாவது ஒரு வகையில் கைவிடப்பட்டுள்ளது களப்பணியில் தெரிய வருகிறது. அவ்வாறு கைவிடப்பட்டவர்கள் பொது இடங்களில் பிச்சை எடுத்து உண்டு கிடைத்த இடத்தில் உறங்கி ஜீவனம் நடத்தி வருகிறார்கள். ஆதரவற்றவர்கள் வாழ்நாளிற்கு பிறகு சரக காவல்துறையினர் வழக்கு பதிந்து பெயர் விலாசம் தெரியாத நிலையில் ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் எங்களுக்கு தகவல் அளிக்கின்றார்கள், தகவலின் அடிப்படையில் சரக காவல்துறையினர் முன்னிலையில் மயானத்தில் உரிமை கோரப்படாத உடலுக்கு உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்து வருகிறோம் என்றார்.
அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் இணையர் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், சட்டப்படிப்பு பயிலும் மகள் கீர்த்தனா இது குறித்து பேசுகையில்,இறுதிச் சடங்கில் ஆண்கள் மட்டுமே ஈடுபடுவது வழக்கமாக உள்ளது,பெண்கள் இறுதிச் சடங்கில் பங்கேற்பது தொடர்பான கருத்துகள் மாறுபடுகின்றன. சிலர் இதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள், சிலர் ஏற்றுக்கொள்கிறார்கள் சிலர் பெண்கள் இறுதிச் சடங்கில் பங்கேற்பது மரபுக்கு எதிரானது என்கின்றனர்.
சில பெண்கள் தங்கள் பெற்றோருக்கோ அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கோ இறுதிச் சடங்குகளை செய்வதில் பெருமிதம் கொள்கிறார்கள். நாங்கள் உற்றார், உறவினர்கள், சுற்றத்தார், நண்பர்களால் கைவிடப்பட்டு இறந்த உரிமை கோரப்படாத ஆதரவற்ற அனாதை பிரேதங்களுக்கு ஒரு மகனாய், ஒரு மகளாய், ஒரு பேத்தியாய் இருந்து உரிமை கோரப்படாத உடலுக்கு உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்து வருகிறோம். ஆதரவற்ற அனாதை பிணங்கள் நல்லடக்க பணிக்கு நாங்கள் எங்களால் இயன்ற அளவு ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் அளித்து வருகிறோம் என்றார்கள்.

0 Comments