சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க. கூட்டணியில் அன்புமணி இடம் பெற்றிருப்பதாலும், தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருப்பதாலும், இருபுறமும் செல்ல முடியாமல் ராமதாஸ் இருந்து வருகிறார். கூட்டணி தொடர்பான முடிவையும் இன்னும் அவர் அறிவிக்காத நிலையில், சசிகலா, கடந்த 11-ந் தேதி திண்டிவனத்தில் உள்ள தைலாபுரம் தோட்டத்திற்கு சென்று ராமதாசை சந்தித்து பேசினார்.அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா, அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார்.
தேர்தலை சந்திப்பது என்ற முடிவுக்கு அவரும் வந்த நிலையில்தான், ராமதாசை சென்று சந்தித்துள்ளார்.இந்த சந்திப்பின்போது, ராமதாசிடம், "உங்களுக்கு அன்புமணியை தோற்கடிக்க வேண்டும். எனக்கு எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க வேண்டும். எனவே, இருவரும் கூட்டணி அமைத்து, சிறிய கட்சிகளையும் சேர்த்துக்கொண்டு தேர்தலில் போட்டியிடுவோம். முடிந்தால், த.வெ.க.வுடனும் கூட்டணி அமைக்கலாம்" என்று யோசனை தெரிவித்துள்ளார்.
ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த ராமதாஸ், "பா.ம.க. பலமாக உள்ள வடக்கு, மேற்கு மாவட்டங்களில் உங்களுக்கு ஆதரவு இல்லை. உங்களுக்கு செல்வாக்குள்ள தென்மாவட்டங்களில் பா.ம.க.வுக்கு ஆதரவு இல்லை. எனவே, இந்த கூட்டணி சரிவராது. எதற்கும் நிர்வாகிகளிடம் கலந்துபேசி கூறுகிறேன்" என்று சொல்லி இருக்கிறார். இதனால், சசிகலாவின் கூட்டணி முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.

0 Comments